விடுதலை படம் நல்ல கதைக்களம், அருமையான மேக்கிங் பண்ணலாம். ஆனா செகண்ட் ஆஃப்ல வர்ற வல்கரான காட்சிகளால ஒரு நல்ல படத்துக்கான ஃபீல மொத்தமா சிதைச்சுட்டார் வெற்றிமாறன். இந்த மாதிரியான கதைக்களம் கொண்ட சினிமாவுல பெண்களை நிர்வாணப்படுத்தி அதை காட்சிப்படுத்தி படமாக்குறது நல்ல சினிமாக்களோட தரத்தை மழுங்கடிக்க செய்துவிட்டது என்கின்றனர் படம் பார்த்தவர்கள்.
தியேட்டரில் 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளோட அனுமதி இல்லை என எச்சரிக்கப்ட்டது. அப்படியென்னா மற்ற படங்கள்ல இல்லாத காட்சிகள் இருக்கப்போவுதுன்னு நினைத்து உள்ளே சென்றவர்கள், செகண்ட் ஆஃப் பார்க்கும் பொழுது 12 வயத்துக்குட்பட்டவர்கள் மட்டுமில்ல அனைவரும் முகம் சுழிக்கும் வகையில் என்ன கேவலமான காட்சி என்கிற வெறுப்பும் வெற்றிமாறன் மீது ஏற்பட்டுள்ளது.
ஓடிக்கொண்டிருந்த படம் திடீரென முடிந்து, அடுத்து பாகம் 2 என தலைப்பு வந்ததும் இது வெறும் ட்ரைலர் தான என்கிற குழப்பம் நீண்ட நேரம் படம் பார்த்தவர்கள் சலித்து கொண்டு திரையரங்கை விட்டு வெளியே வருவதை பார்க்க முடிந்தது. படத்தின் ஆரம்பத்தில் வெற்றிமாறன் இது கற்பனை கதை என்று கூறிவிடுகிறார். ஆனால், இது தர்மபுரியில் நடந்த வாச்சாத்தி சம்பவத்தின் தொகுப்பு என வாச்சாத்தி சம்பவம் பற்றி அறிந்தவர்கள் நிச்சயம் உணர்வார்கள்..
தமிழ்நாட்டிலேயே இல்லாத அருமபுரி என்று ஒரு மாவட்டத்தின் பெயர் படத்தில் வருகிறது. இது தர்மபுரி என பச்சை குழந்தையும் உணரும். முழுமை பெறாத எந்தவொரு கதையும் வெற்றி பெறாது. இந்த விடுதலையும் அந்த ரகம்தான்.வெற்றிமாறன் இந்த படத்தில் சறுக்கி விழுந்தாலும், சூரி என்ற ஒரு சிறந்த நடிகனும், இளையராஜா என்றொரு மாபெரும் இசை மேதையும் மட்டுமே இந்த விடுதலையின் தூண்கள் நிற்கிறார்கள்.
விடுதலை ஒரு படமாகவும் இல்லாமல், டாக்குமெண்டரி போலவும் இல்லாமல் படம் தொக்கி நிற்கிறது. பெண்களை நிர்வாணமாக அடித்து கொடுமை படுத்துவதை திரையில் காண்பித்ததால் மட்டும் உணர்ச்சி வசப்பட்டு இந்த படத்தினை சிறந்த காவியமாக சித்தரிக்க முடியாது. சமீபத்தில் வந்த டாணாக்காரன் படம் போல் , காவல்துறை உயரதிகாரி, கடைநிலை காவலர் பிரச்சினையை மட்டுமே படம் முழுதும் பேசுகிறார் வெற்றிமாறன்.
அவ்வப்போது ஊறுகாய் போல பெண்களை நிர்வாணமாக சித்ரவதை செய்வது போல் காட்சி வருகிறது. மக்கள் படை என சித்தரிக்கப்பட்ட விஜய்சேதுபதி குழுவின் எழுச்சியோ, காவலர்களை மக்கள்படை போராளிகள் ஏன் தாக்குகின்றனர் என்ற வலுவான காரணத்தை படத்தில் பதிய வைக்க தவறிவிட்டார் வெற்றிமாறன்.இறுதியில் இரண்டாம் பாகத்தில் பாகம் என, டிவி சீரியல் போல் தொடரும் போட்டு முடிப்பதில் எந்த சுவாரஸ்யமும் இல்லை.
பெண்கள் தாக்கப்படுவதும், மக்கள் படை என்ற அமைப்பினரின் நோக்கமும் மற்றும் படத்தில் இடம்பெற்றுள்ள சுரங்கம் வர விடாமல் தடுப்பது என படத்தில் பேசுகின்ற காட்சிகள் எவ்வித தாக்கமும் இல்லாமல் கடந்து போகிறது.விடுதலை படத்தில் சூரி என்ற நடிகருக்கு ஒரு நல்ல சிவப்பு கம்பளம் மட்டுமே தவிர வெற்றிமாறன் படம் என திரையரங்குகளுக்கு எதிர்பார்த்து சென்றவர்களுக்கு இந்தப் படம் எவ்வித தாக்கத்தையும் உண்டாக்கவில்லை.
முழுமையடையாத எந்தக் கதையும் வெற்றி பெறாது என்பதை வெற்றிமாறன் விடுதலை படத்தின் மூலம் உணர்ந்து இனி வரும் காலத்தில் கதையில் கவனம் செலுத்த வேண்டும். பயங்கர எதிர்பார்ப்பில் இருந்த விடுதலை முதல் பாகம் ஏமாற்றமே. காவல்துறை உள் அரசியலையே படம் அதிகமாக பேசுவது போன்று டாணாக்காரன் படத்தில் விளக்கமாக பார்த்து விட்டோம். விசாரணை என்ற பெயரில் நடக்கும் கொடுமைகளை விசாரணை, ஜெய்பீம் படங்களில் பார்த்தோம். மொத்தத்துல புதுசா எதையோ சொல்ல வந்து, பழைய படங்களை ஞாபகப்படுத்தி, மிகச் சாதாரணமாக முடிகிறது விடுதலை சீரியலின் எபிசோட்.