விடுதலை படத்தின் கதை மட்டும் காட்சிகள் எங்கெல்லாம் சுட்டு எடுக்கப்பட்டுள்ளது என்பதை, அந்த படத்தில் இடப்பெற்றுள்ள ஒவ்வொரு காட்சிகளையும் அம்பலப்படுத்தி உள்ளார் பிரபல எழுத்தாளர் இரா.முருகவேள். விடுதலை திரைப்படம் கதை ஜெயமோகன் என்று உள்ளது. ஆனால் பாலமுருகன் எழுதிய சோள கர் தொட்டி நாவலில் இருந்தும், சிவ சுப்பிரமணியன் எழுதிய வீரப்பன் வாழ்ந்த நூலில் இருந்தும் இஷ்டத்துக்கு சுட்டு இருக்கிறார்கள்.
தர்மபுரி நக்சல் வேட்டையான அஜந்தா operation நடந்த போது ஏது மாதேஸ்வரன் மலை ஒர்க்ஷாப்!. அபத்தமான அவியலான படம். பழனி பஞ்சாமிர்தம், பாண்டியன் ஊறுகாய், மாங்காய் ஜுஸ், லெமன் சோடா, நர்சுஸ் காபி எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கி மிக்ஸியில் அடித்து செய்த கதை. அரசியலோ வரலாற்று நேர்மையோ கொஞ்சமும் இல்லை. விடுதலை படத்தில் வரும் ஒர்க் ஷாப் காட்சிகள் அனைத்தும் சோளகர் தொட்டி நாவலில் இருந்து எடுக்கப் பட்டுள்ளன. நாவலின் ஆசிரியரின் அனுமதி பெறப்படவில்லை. இது அப்பட்டமான கதைத் திருட்டு ஆகும்.
தேவாரம் தலைமையிலான நக்சல் ஒழிப்பு ஆபரேஷன் அஜந்தா நடந்தது தர்மபுரி மாவட்டத்தில். 1980 ஆம் ஆண்டு. தமிழ்நாடு விடுதலை படை நடத்திய அரியலூர் ரயில் பாலம் குண்டு வெடிப்பு நடந்தது 1987ல். ஈரோடு மாவட்டம் மாதேஸ்வரன் மலையில் ஒர்க் ஷாப் என்று அழைக்கப்பட்ட கட்டடத்தில் நூற்றுக் கணக்கான வர்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டது 93 to 95, 96 வீரப்பன் வேட்டையின் போது நடந்தவை.
இந்த மூன்றுக்கும் சம்பந்தமே இல்லை. சொல்லப்போனால் மக்கள் யுத்தக் கட்சியும், தமிழ் நாடு விடுதலைப் படையும் தங்கள் நூற்றுக்கணக்கான ஊழியர்களுடன் காட்டிற்கு பின்வாங்கி இருந்தால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது. பின்பு சில பத்து பேராக விடுதலைப் படை சுருங்கிய பின்பே வீரப்பனின் சேர்ந்தார்கள். அதுவும் குறுகிய காலம் மட்டுமே. மூன்று வெவ்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை கலந்து குழப்பி திரித்து படம் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. இது இயக்குனரின் முதிர்ச்சி இன்மையை காட்டுகிறது.
Cordon and search operation என்று சொல்லப்படும் சுற்றி வளைத்து நடத்தப்படும் தேடுதல் நடவடிக்கை பற்றிய அடிப்படை புரிதலே இல்லாமல் சூரி விஜய் சேதுபதியை பிடிக்கும் சண்டைக் காட்சி எடுக்கப் பட்டுள்ளது. அபத்தத்திலும் அபத்தம். வழக்கமான தமிழ் சினிமா சண்டை. இதில் சூரி துப்பாக்கியை எடுக்கும் காட்சி enemy at the gates சாயலில் வேறு. அதுவே ஒரு டப்பா படம்.
தலைமறைவு வாழ்க்கை என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சமும் தெரியாமலேயே சூரி ஒவ்வொரு கதவாகத் தட்டி தலைவர் ஒளிந்திருக்கும் இடம் எனக்குத் தெரியும் என்று சொல்லும் காட்சி எடுக்கப் பட்டிருக்கிறது நல்ல காமெடி காட்சி. தலைமறைவு தோழர்கள் முன்சீப் கோர்ட்டில் கேஸ் இருக்கும் போது பிடியை விட்டால் வீடு போய்விடும் என்பது போல ஒரே வீட்டில் நாள்கணக்காக கும்பலாக ஆயுதங்கள் உடன் இருப்பார்கள் என்று இயக்குனர் நினைத்து இருப்பது சரியான காமெடி.
தலைமை செயலர், போலீஸ் அதிகாரிகள் கூடிக் கூடி பேசுகிறார்கள். ஆனால் ஒன்றுமே உருப்படியாக இல்லை. திரைக்கதையும் வசனங்களும் படு மோசம். அறிவோ உக்கிரமோ இல்லாத மிக மிக பலவீனமான உரையாடல். படத்தில் மக்கள் போராட்டமே இல்லை. ஆனால் இனத்துக்கு ஆபத்து என்றால் போராடுவார்கள் என்று சீவல ப்பேரி பாண்டி போல ஒரு காட்சி. தர்ம புரியில் நடந்தது வர்க்கப் போராட்டம்.
தமிழ் நாடு விடுதலைப் படை தோழர் தமிழரசன் தொடக்க காலத்தில் மக்கள் திரள் அமைப்புகள் கட்ட முயன்று பின்பு ஆயுத நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கினர். அந்த இயக்கம் மக்கள் போராட்டமாக மாறுவதற்கு முன்பே அவர் கொல்லப்பட்டார். பிறகு இங்கே சீவலப்பேரி டயலாக். . .
இந்த திருட்டில் ஜெயமோகனுக்கு பங்கு இருக்காது என்று நினைக்கிறேன். ஆனால் இன்னொருவர் கதைக்கு தான் பெயர் போடும் போது கூசி இருக்க வேண்டும். ஆனால் தனக்கும் இது பற்றியெல்லாம் தெரியும், படத்தில் வரும் இந்த விஷயங்களில் தனக்கும் பங்கு உண்டு என்பது போல பாசாங்கு செய்து அவர் பேட்டி கொடுத்து வருவது சுயமரியாதை அற்ற தன்மையை காட்டுகிறது.
தமிழ் நாட்டில் படித்த அரசியல் உணர்வுள்ள பார்வையாளர்கள் தங்கள் புல்லரிப்பு மனநிலையில் அரசு எதிர்ப்பு படம், அடக்குமுறையை அம்பலப்படுத்தும் படம்.என்று அவசரப் பட்டு கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும். அபத்தங்கள் போலிகளை புரிந்து கொள்வது அறிவுபூர்வமான ரசனையின் முக்கிய அம்சமாகும் என எழுத்தாளர் இரா.முருகவேள் தெரிவித்துள்ளார்.