நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. முனியாண்டி கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரிலுள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களது வீட்டில் சமீபத்தில் இரவு 10.30 மணியளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர்.
இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில், சின்னத்துரை படிக்கும் பள்ளியில் சில மாணவர்கள் அவரை சாதிய ரீதியாக தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.
அதனால் இதுகுறித்து பெற்றோரிடமும் தலைமையாசிரியரிடமும் சின்னத்துரை கூறியுள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்கள், வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதைக் கண்டித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இதனைக் குறித்து சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இதனைக் குறித்து இயக்குனர் கௌதமன் அவர்களும் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது, “ஜாதியை பிரச்சனைகளை தூண்டுவதே இரண்டு இயக்குனர்களின் படங்கள் தான்.
அவர்கள் படங்களின் மூலம் ஜாதி வன்மத்தை புதுப்பிக்கிறார்கள். இல்லாத ஜாதி பிரச்சனையை உருவாக்குகிறார்கள். இந்தப் பிரச்சனையானது மாணவர்களிடையே பரவுகிறது. அதுதான் இன்று இப்படி கொலையாகப் பிறந்துள்ளது. ஜாதி படத்தை எடுத்துவிட்டு கோடி கணக்கில் சம்பாதித்து நீங்கள் போய் விடுவீர்கள். ஆனால் பாதிக்கப்படுவது சமுதாயம் தான். இளம் சமுதாயத்திற்கு கஞ்சா செடியை காட்டாதீர்கள். மூலிகை செடியை காட்டுங்கள்.” என்று பேசியுள்ளார்.
இவர் கூறிய அந்த இரண்டு இயக்குனர்கள் மாரிசெல்வராஜ் மற்றும் பா ரஞ்சித் தான் என பலரும் கருத்து தெரிவித்து வருகையில், பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் சாதிக்கு எதிரான படங்களை இயக்கியுள்ளார்கள். ஆனால், இங்கு விமர்சனம் வைக்கப்படுவது பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் மீது மட்டும்தான். இந்த விமர்சனத்துக்கும் அவர்கள் துளி கூட தகுதியானவர்கள் இல்லை என முற்போக்கு வாதிகள் தெரிவித்து வருகிறார்கள்.
ஏனென்றால் அவர்கள் இயக்கிய படங்கள் அனைத்தும் சாதியை போற்றி எடுக்கப்பட்டது கிடையாது. சாதியை தவறாகவே அவை காட்டியுள்ளன. அதை பொறுக்க முடியாமல்தான் மாமன்னன் படத்தின் வில்லன் ரத்னவேலுவின் கொடூரமான குணத்தை அறிந்தும் அவரை ஹீரோவாக ஏற்று பகத் பாசிலுக்கு குறிப்பிட்ட சிலர் பயர் விட்டு வந்ததாகவும்,
சாதியை போற்றிய படங்களையும், சாதி எதிர்ப்பு படங்களையும் சாதிய படங்கள் என்று ஒரே தட்டில் வைத்து விமர்சிப்பது என்பது விஷத்தையும், மருந்தையும் ஒன்றாக பார்ப்பதை போன்றதாகும். இதனை ஏற்க முடியாமல் ஒருபக்கம் சாதி ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வருவதாக கருத்துக்களை பதிவு செய்யும் பா.ரஞ்சித் மற்றும் மாரிசெல்வராஜ் ரசிகர்கள். நாங்குநேரி போன்ற கொடூரங்கள் அரங்கேறாமல் இருக்க பள்ளிகளின் மூலமாகவும் சமூக நீதி குறித்து மாணவர்கள் மத்தியில் அரசு பேச வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.