இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்திற்கு பின்பு பல இயக்குனர்களுக்கு வரலாற்றுக் கதையை படமாக்கும் துணிச்சல் வந்துவிட்டது. அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்பொழுது முதல் பாகம் வெளியாகியுள்ளது. அடுத்த ஆறு மாதங்கள் அல்லது ஒன்பது மாதங்களில் இரண்டாவது பாகம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இயக்குனர் மணிரத்தினத்தை தொடர்ந்து, இயக்குனர் சங்கர் வரலாற்று கதையை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். சு. வெங்கடேசன் எழுத்தில் வெளியான வேள்பாரி நாவலை தழுவி சுமார் ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக இந்த படத்தை எடுக்க இருக்கிறார் சங்கர். இந்த படத்தில் கே ஜி எஃப் ஹீரோ யாஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வேள்பாரி நாவலை எழுதிய சு வெங்கடேசனுக்கு கதைக்கான காப்பீட்டுத் தொகை சில கோடிகள் சங்கர் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தற்போது சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் புதிய படத்தை ஒன்று இயக்கி வருகிறார், இந்த படத்தை முடித்த பின்பு, தன் கைவசம் இருக்கும் இந்தியன் 2 படத்தையும் முடித்து விட்டு, அடுத்ததாக வரலாற்று கதையை தழுவிய வேள்பாரி படத்தை தொடங்க இருக்கிறார்.
இந்த படத்தின் சேர, சோழ, பாண்டிய காலத்தில் நடக்கும் ஒரு சண்டைக் காட்சி துறைமுகத்தில் மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவாகும் வேள்பாரி படத்தில் இடம்பெறும் இந்த சண்டைக் காட்சிக்கு மட்டும் பல கோடி செலவு செய்ய இயக்குனர் சங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த சண்டை காட்சி வேள்பாரி படத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கும் என்றும், பண்டைய காலத்தில் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் விதத்தில் மிகத் தத்துரூபமாக இந்த சண்டைக் காட்சியை மிக பிரம்மாண்டமாக எடுக்க இயக்குனர் சங்கர் திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.