நீண்ட வருடத்துக்கு பின்பு தெலுங்கு நடிகர் ராம் பொதினி நடிப்பில் ஒரு வெற்றி படம் கொடுத்து தன்னை மீண்டும் நிலை நிறுத்தியுள்ளார் இயக்குனர் லிங்குசாமி. ஆரம்பத்தில் கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்து வந்த இயக்குனர் லிங்குசாமி, அவர் இயக்கிய அஞ்சான் படத்துக்கு பின்பு காணாமல் போனார். அதன் பின்பு படங்களை தயாரித்து வந்தவர், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான உத்தமவில்லன் படத்தை தயாரித்த பின்பு மிக பெரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானார் லிங்குசாமி.
இப்படி கடந்த சில காலமாக சோதனை மேல் சோதனை சந்தித்து வந்த லிங்குசாமி சினிமா கேரியர் முடிந்து விட்டது என பேசப்பட்டு வந்த நிலையில், தி வாரியர் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் லிங்குசாமி. ஆனந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான லிங்குசாமி. அவர் இயக்கிய அடுத்த இரண்டாவது படம் ரன் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து மிக பெரிய உச்சத்துக்கு அவரை அழைத்து சென்றது.
இந்த படத்தில் நடித்த நடிகர் மாதவன் மற்றும் இயக்குனர் லிங்குசாமி இடையில் நல்ல நட்பு இருந்து வருகிறது. அதே போன்று இயக்குனர் சீமான் இயக்கத்தில் வெளியான வாழ்த்துக்கள், தம்பி போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகர் மாதவன், இதில் தம்பி திரைப்படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டது. மாதவன் நடிப்பும் பாராட்டுக்கு உள்ளானது. இதனால் சீமான் அரசியல் கொள்கையில் மாற்று கருத்து இருந்தாலும்,தனிப்பட்ட முறையில் அவர் மீது நல்ல நட்பு மாதவனுக்கு இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்பொழுது லிங்குசாமி இயக்கத்தில் வெற்றி நடைபோடும் தி வாரியர் படத்தின் கதை தன்னுடையது என சீமான் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் லிங்குசாமி தரப்பில் தி வாரியர் படத்தின் கதை அஞ்சான் படம் எடுப்பதற்கு முன்பே லிங்குசாமி தயார் செய்துவிட்டார் என்றும், இந்த படத்தின் கதையை தான் முதலில் நடிகர் சூர்யாவிடம் லிங்குசாமி தெரிவிக்க பின்பு சூர்யா வேறு கதை இருந்தா சொல்லுங்க என்றதும் அஞ்சான் படத்தின் கதையை ஓகே செய்துள்ளார்கள்.
ஆனால், தி வாரியார் கதை தன்னுடைய கதை தான், இந்த கதையை தான் ஒரு முறை மாதவனிடம் தெரிவித்துள்ளேன், அவர் தான் இந்த கதையை லிங்குசாமியிடம் தெரிவித்திருக்க வேண்டும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் வேதனையுடன் தெரிவிக்கும் சீமான், நம்பி கதை சொன்னேன், ஆனால் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார், துரோகி மாதவன் என மிக கடுமையாக அவருக்கு நெருக்கமானவர்களிடம் சீமான் பேசி வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில், சீமானுக்கு வேறு வேலையில்லை, அவர் லிங்குசாமி இயக்கத்தில்,மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்தின் கதையை கூட தன்னுடைய கதை என்று பிலா விட்டவர், அஞ்சான் படத்தின் போதே தி வாரியார் படத்தின் கதையை தயார் செய்துவிட்டு இந்த கதையை பல நடிகர்களிடம் லிங்குசாமி தெரிவித்தது சினிமா துறையில் இருக்கும் பலருக்கும் தெரியும் என்கின்றது சினிமா வட்டாரம்.