இது தொடர்ந்தால்…. விஜய் சேதுபதி.. நீ சினிமாவில் காணாமல் போய் விடுவாய்..! ஒலித்தது எச்சரிக்கை மணி..

0
Follow on Google News

சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் ஓன்று செம்ம மொக்கையாக இருந்தது, இது தொடர்பாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது, இதனை தொடர்ந்து விஜய் சேதுபதியின் நெருக்கிய தொடர்பில் இருக்கும் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதிக்கு எழுதிய கடிதத்தில், அன்புள்ள தம்பி விஜய் சேதுபதிக்கு… உங்கள் மீது அக்கறையுள்ள அண்ணன் எழுதிக் கொள்வது, சமீபகாலமாக தங்கள் நடிப்பில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் விஜய்சேதுபதி என்கிற மகத்தான கலைஞனை மாய்த்துவிடுமோ என்கிற அச்சத்தில்தான் இந்த கடிதம்.

சினிமா மீது கொண்ட தீராத தாகத்தால் கூத்துப்பட்டறையில் கணக்கராக வேலை செய்து கொண்டே நடிப்பு கற்று, நீண்ட நெடிய வாய்ப்பு தேடலில் அட்மாஷ்பியர் ஆர்ட்டிஸ்டாகி, பின்னர் சின்ன சின்ன வேடங்களில் நடித்து குறும்பட நடிகராகி பின்பு தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் முழுமையான நடிகரானீர்கள். அதுவரையிலான தங்களின் உழைப்பும், பட்ட அவமானங்களும் ஒரு புத்தகமாக எழுதும் அளவிற்கு கனமானவை என்பதை நான் அறிவேன்.

உங்களுக்கு நினைவிருக்குமா என்று தெரியாது. நுங்கம்பாக்கம் 4 பிரேம் தியேட்டரில் தென்மேற்கு பருவக்காற்று பத்திரிகையாளர் காட்சி முடிந்ததும் உங்கள் பைக்கிலேயே என்னை அருகில் உள்ள டீ கடைக்கு அழைத்து சென்று டீ வாங்கிக் கொடுத்து “படம் எப்டீண்ணே இருக்கு. ஜெயிச்சிரும்லாண்ணே…” என்று அன்று நீங்கள் சொன்னபோது உங்கள் கண்களில் இருந்த ஆர்வத்தையும், சினிமா நேசத்தையும் இப்போதும் காண்கிறேன்.

பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் என அடுத்தடுத்து வெளியான படங்களில் அதுவரை நடிப்பு பற்றி இருந்த அத்தனை கருத்தாக்கங்களையும் உடைத்தெறிந்து புதிய தடத்தை பதித்தீர்கள், ஆரஞ்சு மிட்டாய், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், புறம்போக்கு என்கிற பொதுவுடமை, விக்ரம் வேதா உள்ளிட்ட பல படங்களில் நடிப்பு அசுரனாக நிமிர்ந்து நின்றீர்கள். 96ல் காதலாகி கசிந்துருகினீர்கள்.

நீங்கள் நட்புக்கு மரியாதை செய்கிறவர் என்பதை உலகம் அறியும். அதனால்தான் நஷ்டமாகும் என்று தெரிந்தும் லாபம் படத்தை தயாரித்தீர்கள். நட்புக்காக அளவுக்கு அதிகமான படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துக் கொடுத்தீர்கள். ஆனால் சமீபகாலமாக உங்கள் நடிப்பில் ஏன் இத்தனை தடுமாற்றம், கதை தேர்வில் ஏன் இத்தனை அக்கறையின்மை. லாபம் ஒரு பிரச்சார நெடி நிறைந்த படம்தான். ஆனாலும் அதில் ஏன் இத்தனை மேம்போக்காக நடித்தீர்கள். தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுப்பது மாதிரியான முகபாவத்திலேயே ஏன் நடித்தீர்கள்.

நாம் எதுசெய்தாலும் மக்கள் ஏற்பார்கள் என்கிற தங்களின் திடீர் மமதையையே துக்ளக் தர்பார் படத்தில் நீங்கள் வெளிப்படுத்தினீர்கள். கண்ணை சிமிட்டி விட்டால் இன்னொரு குணாதிசயம் கொண்டவனாக மாறிவிடுகிற துளியும் லாஜிகில்லாத ஒரு கதையை எப்படி தேர்வு செய்தீர்கள். அனபெல் சேதுபதி படத்தின் கதை தெரிந்து நடித்தீர்களா? அல்லது டாப்சியுடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் நடித்தீர்களா? என்றே புரியவில்லை. நடிக்கும்போதே இந்த காட்சிகள் மக்களால் கேலியாக பார்க்கப்படும் என்பது உங்களுக்கு எப்படி தெரியாமல் போனது.

அமீர்கான் படத்தையே மறுக்கும் அளவுக்கு தெளிந்த சிந்தனையும், செயல்பாடும் கொண்ட உங்களால் எப்படி உருப்படாத கதைகளை தேர்வு செய்து, அதில் கொஞ்சமும் மெனக்கெடாமல் நடிக்க முடிகிறது. இனி வரப்போகும் படங்கள் எப்படி என்று தெரியாது. ஆனால் இப்படியே தொடர்ந்தால், விஜய்சேதுபதியை வெறும்சேதுபதியாக்கிவிடும் சினிமா. நல்ல கலைஞன் மீது கொண்ட அக்கறையாலும், ஒரு அண்ணன் என்கிற அன்பாலுமே இந்த கடிதம். அன்புடன் அண்ணன். (Meeran Mohamed)