நடிகைகள் தற்கொலை மரணம் குறித்து அலசும் சிறப்பு செய்தி, பிரபல எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் சினிமா நடிகைகள் தற்கொலை சம்பவம் குறித்து கூறுகையில், அந்த இளம்நடிகை சித்ராவின் மரணம் இன்னும் சோக அலையினை அடித்து கொண்டேதான் இருக்கின்றது, பரபரப்பு தகவல்கள் வரும் நேரம் அவை இன்னொரு பக்கம் மறைக்கவும் படுகின்றன ஒரு பெண் நடிகையாவது ஒரு சாபம், அதுவும் தமிழகத்தில் மகா சாபம் அவள் வருவது என்னவோ நடிக்கத்தான், ஆனால் சந்தையில் காட்சிபொருள் போல் ஆகிவிடுவாள், ஆம் இளம்நடிகைக்கு பணம் கொட்டும் எங்கிருந்தெல்லாமோ கொட்டும்
நடிக்க பணம், விளம்பர பணம், கடை திறக்க பணம் என தெரிந்த பணம் இன்னும் தெரியாத பணமெல்லாம் நிறைய கொட்டும், மடை திறந்த வெள்ளம் போல் கொட்டும், அப்பொழுது பல வஞ்சகமும் உள்நோக்கமும் கொண்ட கூட்டம் அவளை சூழும், இளம் வயதில் இருக்கும் பெண்கள் அதில் வசமாக அனுபவமின்றி முன்யோசனை இன்றி சிக்குவார்கள், மிக சில நடிகைகள் தங்களை தாங்களே சுதாரித்து கொள்வார்கள் அது வெகு வெகு சில, தேவிகா அந்த ரகம். அதற்கு தனி தைரியமும் ஒருமாதிரி முரட்டுதனமும் வேண்டும்
அது அல்லாத நடிகையர்கள் நம்ப கூடாத கூட்டத்தை நம்பி நாசமாய் போவார்கள், உலகில் எப்பொழுதுமே சம்பாதிப்பவனை விட சம்பாதிக்காமல் ஏமாற்றி வாழ்பவனுக்கு சொத்து ஆசையும் பொருள் ஆசையும் அதிகமிருக்கும், அப்படிபட்ட கூட்டத்திடம் இளம் நடிகைகள் எளிதாக ஏமாந்துவிட்டு கடைசியில் உண்மை தெரிந்து தாங்கமுடியா சோகத்தில் செத்தும் விடுவார்கள். இதற்கு அமெரிக்க மர்லின் மன்றோ முதல் தமிழக சில்க் ஸ்மிதா , ஷோபா , படாபட் ஜெயலட்சுமி முதல் ஸ்ரீவித்யா வரை எண்ணிக்கை ஏராளம் அதில் இந்த சித்ராவும் சேர்ந்து கொண்டார்.
ஆம் நடிகைகள் சாக துணிபவர்கள் அல்ல அதற்கு மேல் எல்லாவற்றுக்கும் துணிந்துதான் நடிக்க வருவார்கள் பணத்துக்காய் சிரித்து, பணத்துக்காய் நடித்து, பணத்துக்காய் அழுது, பணத்துக்காய் அரிதாரமிட்டு பணம் பின்னால் ஓடும் அவர்கள் மனம் அன்புக்காய் ஏங்கும், ஒரு உண்மையான அன்புக்காய் ஏங்கும், அந்த அன்பான மனம் தனக்கு ஆறுதலாய் இருக்கும் என நம்பி வாழ்வார்கள், அது பொய்க்கும் பொழுது வாழவிரும்புவதில்லை
எளிதில் அவர்கள் முழங்கால் வரை கொட்டும் பணம், அவர்கள் கழுத்தளவு குவியும் தங்கம் என எல்லாம் கிடைத்தும் அன்பு கிடைக்காமல் உயிர்விடுவது அவர்கள் வாங்கி வந்த சாபம்.. இந்த சித்ரா வழக்கில் மர்மம் உண்டு, எப்பொழுதும் தற்கொலைகள் தனியாக இருக்கும் பொழுதுதான் நடக்கும், அருகே ஒருவர் இருக்கும் பொழுது தற்கொலைகள் சாத்தியமே இல்லை, விவகாரம் வேறு ஏதோ வில்லங்கம், அதெல்லாம் வெளிவராது
மனைவி உட்பட பலபெண்களை கதறவைத்து பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய எந்த நடிகனும் நிலைத்ததில்லை அதற்கும் எடுத்துகாட்டுகள் அதே சினிமாவிலும் உண்டு, பெண்களுக்கு செய்யும் துரோகம் பெரும் பாவமாய் தொடரும் என்பதை சினிமா உலகமே அழகாக காட்டி கொண்டிருக்கின்றது, சித்ராவின் சாவுக்கு காரணமானவர்களும் அந்த பாவத்தை சுமந்து கொண்டிருக்கின்றார்கள், சட்டத்தில் இருந்து அவர்கள் தப்பலாம், ஆனால் கடவுளின் தீர்ப்பில் இருந்து அவர்களும் அவர்களின் தலைமுறையும் தப்பவே முடியாது.