அதிக பணச்செலவில் எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியானது. ஆனால், தமிழ்நாடு மற்றும் ஓவர்சீஸ் தவிர்த்து எதிர்ப்பார்த்த வசூலை இதுவரை பெறவில்லை. பொன்னியின் செல்வன் படம் முதல் நாள் வசூல் உலகம் முழுவதும் சுமார் 78 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது, இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 25 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் நாள் வசூலை விட இரண்டாவது நாள் குறைந்து சுமார் 21 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான படுதோல்வி அடைந்த பீஸ்ட் படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் ரூபாய் 26 கோடி ரூபாய் வசூல் பெற்றது, அந்த வகையில் பீஸ்ட் படத்தின் வசூலை விட பொன்னியின் செல்வன் படம் பின்தங்கியுள்ளது. மேலும் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தின் வசூலையும் பொன்னியின் செல்வன் முறியடிக்கமுடியவில்லை.
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். முதல் நாள் வசூல் ரூபாய் 235கோடி, அதற்கு முன்பு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி முதல் நாள் வசூல் ரூபாய் 215 கோடி. அதே போன்று கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் – 2 முதல் நாள் வசூல் 165 கோடி என வசூல் சாதனை படைத்தது. அந்த வகையில் வெறும் ரூபாய் 78 கோடி ரூபாய் மட்டும் வசூல் செய்த பொன்னியின் செல்வன் படம் இதற்கு முன்பு வெளியான பேன் இந்தியா படங்களின் வசூலில் பாதி கூட பெறவில்லை.
மேலும் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளியாகி படுதோல்வி அடைந்த சா ஹோ என்கிற படம் முதல் நாள் வசூல் 126 கோடி ரூபாய் ஆகும். அந்த வகையில் மிக குறைந்த அளவு வசூல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன் படம் பேன் இந்தியா படத்திற்கான அந்தஸ்தை இழந்துள்ளது. மேலும் பிற மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்திக்கான வசூல் மிக குறைவாக உள்ள நிலையில் எப்படி இதை பேன் இந்தியா படமாக ஏற்று கொள்ள முடியும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
தமிழர்களின் பெருமை அடைய செய்யும் சோழ சாம்ராஜ்யத்தை உலகுக்கு எடுத்துரைக்கும் வாய்ப்பை நழுவ விட்டுவிட்டார் இயக்குனர் மணிரத்தினம் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. அதே நேரத்தில் வட இந்திய படங்களான ராணி பத்மாவதி, பாஜிராவ் மஸ்தானா போன்ற வரலாற்று திரைப்படங்களை இந்தியா முழுவதும் உள்ள அணைத்து மொழி பேச கூடிய மக்கள் ரசிக்கும்படி அந்த மக்களின் வாழ்வியலை படமாக்கி இருப்பார்கள்.
ஆனால் தமிழர்களின் வாழ்வியல், தமிழர்களின் பெருமைகளை பிற மொழி மக்கள் ரசிக்கும் படி பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க தவறி விட்டார் மணிரத்தினம். சமீபத்தில் மணிரத்தினம் மனைவி சுஹாசினி பேசியது போன்று, பொன்னியின் செல்வன் படம் தமிழகத்தில் வெறும் 10 சதவிகிதம் தான் எடுக்கப்பட்டுள்ளது என்று முகத்தை சலித்து கொண்டு பேசியதும், 90 சதவிகிதம் தெலுங்கானா, ஆந்திராவில் எடுக்கப்பட்டுள்ளது என்று மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சியுடன் பேசியிருப்பார்.
அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு வெறும் 10 சதவிகிதம் மட்டுமே தமிழகத்தில் நடைபெற்றது, ஆனால் தமிழனின் பெருமையையும், தமிழனின் வாழ்வியல் முறையையும் ஒரு சதவிகிதம் கூட பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்தினம் காட்சிப்படுத்தவில்லை என்பது ஒவ்வொரு தமிழனையும் ஏமாற்றம் அடைய செய்துள்ளது. அந்த வகையில் பொன்னியின் செல்வன் படம் தமிழர்களின் பெருமை என்று எந்த விதத்திலும் உணரமுடியவில்லை.
ஆக மொத்தத்தில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை பிற மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட்டிருந்தால் கூட, பிற மொழி மக்களிடம் தமிழனின் பெருமை சென்றடைந்திருக்கும், ஆனால் கல்கியின் பொன்னியின் செல்வன்,மணிரத்தினம் கையில் சிக்கி சின்னா பின்னமாகியுள்ள நிலையில், இதை பேன் இந்தியா படம் என்று சொன்னால் இதற்கு முன்பு வெற்றி பெற்ற பேன் இந்தியா படத்தின் இயக்குனர்களுக்கு சிரிப்பு தான் வரும் என்பது குறிப்பிடதக்கது.