ரெட்ரோ படத்தில் சூர்யா முதல் காட்சியிலேயே தன் அப்பாவை பறிகொடுத்து, நிற்க, அவரை தத்தெடுத்து வளர்க்கிறார் ஜோஜு ஜார்ஜ் மனைவி. தனது மனைவி ஸ்வாசிகா தத்தெடுக்கும் வளர்க்கும் சூர்யாவை பிடிக்காத போதும், அவன் தனக்காக சண்டை போட்ட போது அவனை மகனாக ஏற்றுக்கொள்ளும்போதும், அந்த மகன் தன்னை விட்டு போகிறான் என தெரிந்தபின் அவனின் காதலியை கொல்ல முடிவு செய்யும் போதும் ஜோஜு ஜார்ஜ் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.
மற்றபடி பிரகாஷ்ராஜ், நாசர் போன்றவர்களுக்கு படத்தில் பெரிய வேலை இல்லை.அப்பாவுக்காக ரவுடிசம் செய்யும் சூர்யா காதலி பூஜா ஹெக்டேவுக்காக மனம் திருந்தி ஒரு நல்ல வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறார். ஆனால், அதே அப்பாவால் அவருக்கு பிரச்சனை வர அதை அவர் எப்படி சமாளித்தார் என்பதுதான் படத்தின் ட்விஸ்ட். என்ன தான் ஜோஜு ஜார்ஜை-யை சூர்யா அப்பாவாக பார்த்தாலும், அவரோ ஒரு அடியாளாக தான் பார்க்கிறார்.

அவரை வைத்து பல நாச வேலைகளை பார்க்கிறார். அதே நேரத்தில் சூர்யாவுக்கு பூஜா மீது காதல் வர, அடிதடி எல்லாத்தையும் விட்டு, திருமண வாழ்க்கையில் நுழைய முயல்கிறார். ஆனால், அப்பா தனக்கு கொடுத்த கடைசி வேலை ஒன்றை சூர்யா செய்யாமல், அதை மறைத்து வைக்கிறார். இதனால் கோபமான ஜோஜு ஜார்ஜ், பூஜாவை கொன்றால் தான் நீ அதை சொல்வாய் என கொல்ல வர, ஜோஜு ஜார்ஜ் கையை சூர்யா வெட்டுகிறார்,.
இதனால் பூஜா கோபத்துடன் அந்தமான் செல்ல, சூர்யா சிறை செல்கிறார். பிறகு தன் காதலி இருக்குமிடம் தெரிந்து சூர்யா அங்கு செல்ல, அதே நேரத்தில் ஜோஜு ஜார்ஜ் குரூப் மற்றும் சிலர் சூர்யாவை துரத்தி வர, பிறகு என்ன ஆனது யுத்தத்தில் என்பதே மீதிக்கதை. சூர்யாவுக்கு சிரிக்கவே தெரியாது என்கிற கான்செப்ட்டை வைத்து படத்தை நகர்த்தியிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். வழக்கமான அவரின் ஸ்டைலில் மேக்கிங் நன்றாகவே இருக்கிறது.
ஆனால், சூர்யா சிரிக்க துவங்கியதும் காட்சிகளில் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடுகிறது. தளபதி படத்தையும் கிளாடியேட்டர் படத்தையும் கொஞ்சம் உல்டா செய்தது போல் திரைக்கதை எழுதி இருக்கிறார் கார்த்திக் சுப்பாராஜ். ரெட்ரோவிலும் முதல் பாகத்தில், ‘ஆஹா’ என ஆரம்பிக்கும் பிரீயட் காலம் காட்சிகள் செல்ல செல்ல வலுவை இழப்பதுடன் இதையெல்லாம் விட சிறந்த காட்சிகளை கார்த்திக் சுப்புராஜ் உருவாக்கிவிட்டாரே என்கிற எண்ணமே எழுகிறது.
அதேபோல், இளம்வயது சூர்யாவின் ரயில் சண்டைக் காட்சியும் பின்னணி இசையும் ஆர்வத்தைத் தூண்டினாலும் படத்தில் ஏகப்பட்ட சண்டைகள் ஏன் வருகின்றன, இப்போது எதற்கு என சலிப்பைத் தருகின்றன. வழக்கமான கார்த்திக் சுப்புராஜ் படங்களுக்கே உரித்தான ஒரு ‘நியாயம்’ இப்படத்திலும் பேசப்பட்டிருக்கிறது.
ஒட்டுமொத்த திரைப்படத்திலும் ‘கனிமா’ பாடலும் அதனுடன் நிகழும் காட்சிகளும் 15 நிமிட சிங்கிள் ஷாட்டில் அட்டகாசமாக எடுக்கப்பட்டிருந்தது. கார்த்திக் – பூஜா ஹெக்டே – சந்தோஷ் நாராயணன் கூட்டணி என இப்பகுதியை மட்டும் தனித்து கூறும் அளவிற்கு நல்ல திரையரங்க அனுபவம். ஆனால், கார்த்திக் சுப்புராஜ் ஏன் இந்தக் கதையைத் திரைப்படமாக எடுத்தார்? ஜகமே தந்திரம், ஜிகர்தண்டா – 2 ஆகிய இரண்டு படங்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட கதைபோல் இருக்கிறது. ஜிகர்தண்டா – 2 கிளைமேக்ஸுக்கும் ரெட்ரோ கிளைமேக்ஸுக்கும் சில வித்தியாசங்கள் மட்டுமே இருக்கின்றன.