தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. 70களில் இசை பயணத்தை தொடங்கிய இவர் சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வந்தார். இவர்கிட்ட தட்ட 5000 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட நிறுவனங்கள் முன்னதாக ஒப்பந்தம் செய்திருந்தன.
இதை அடுத்து ஒப்பந்தம் முடிந்த பிறகும் நிறுவனங்கள் தனது பாடல்களை உபயோகப்படுத்துவதாக குற்றம் சாட்டி இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். முதலாவதாக இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, இசை நிறுவனங்கள் தயாரிப்பாளர்களிடம் அனுமதி பெற்று விட்டு பாடல்களை பயன்படுத்த அனுமதி உள்ளதாகவும், அதே சமயம் இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தார்மீக சிறப்பு உரிமை இருப்பதாகவும் 2019 ஆம் ஆண்டு உத்தரவிட்டு தீர்ப்பளித்து இருந்தார்.

இந்த தீர்ப்பில் திருப்தி அடையாத இளையராஜா, மீண்டும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தார். இரண்டு நீதிபதிகள் இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்தனர். பின்னர், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துவதற்கு இசை நிறுவனங்களுக்கு தற்காலிக தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர்.
இதற்கிடையில், பாடல்களின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதாகவும், அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களை பயன்படுத்த அதிகாரம் இருப்பதாகவும் இசை நிறுவனங்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தன.
இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் R.மகாதேவன், முகமது ஷாபிக் ஆகியவரின் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எப்போ நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன், இளையராஜா இசை அமைத்ததற்கு தயாரிப்பாளர்கள் சம்பளம் கொடுத்து விட்டதால் பாடல்களின் காப்புரிமை தயாரிப்பாளர்களிடம் சென்று விட்டது. தயாரிப்பாளர்களிடம் இருந்து உரிமையை நிறுவனங்கள் பெற்றுக் கொண்டதால் நிறுவனங்கள் பாடல்களை பயன்படுத்தலாம் என்று வாதாடினார்.
இதற்கு இளையராஜா தரப்பில் ஆஜரான சதீஷ் என்ற வழக்கறிஞர், இசையமைத்தல் என்பது கிரியேட்டிவிட்டியான பணி என்பதால் காப்புரிமை பொருந்தாது என்று நீதிமன்றத்தில் முறையிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “நீங்கள் சொல்வதைப் போல எடுத்துக் கொண்டால் பாடலாசிரியரின் முத்தான வரிகள், பாடகரின் இனிமையான குரல் அனைத்தும் சேர்ந்து தான் ஒரு பாடல் உருவாக்கப்படுகிறது. அப்படி இருக்கையில், பாடலாசிரியரும் பாடவரும் பாடலுக்கு உரிமை கூறினால் என்ன ஆகும்” என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்த நீதிபதிகள், பாடல்கள் விற்பனை மூலம் பெற்ற தொகை யாருக்கு சொந்தம் என்பது இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பாடியதற்காக இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி மிக பெரிய சர்ச்சையில் சிக்கினார்.
இளையராஜா வக்கீல் நோட்டிஸ் அனுப்பிய காலகட்டத்தில், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை ஒட்டி, உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இசை கச்சேரிகள் நடத்தி வந்தார். கனடா, ரஷியா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி விட்டு அமெரிக்காவில் கச்சேரி நடத்த இருந்த நிலையில். அவருக்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி தனது பாடல்களை மேடைகளில் பாட தடை விதித்ததை அறிந்த எஸ்பி பாலசுப்பிரமணியம் தனது பேஸ்புக் பக்கத்தில் தாம் இனி இளையராஜாவின் பாடல்களை பாடப் போவது இல்லை என்று தெரிவித்தது குறிப்பிடதக்கது.