இதை பார்த்தாவது இளையராஜா திருந்த வேண்டும்… தக்க பாடம் புகட்டிய இசையமைப்பாளர் சிற்பி..

0
Follow on Google News

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் ’குணா’ படத்தில் இடம்பெற்ற ’கண்மணி அன்போடு காதலை’ என்ற பாடல் இடம் பெற்றுள்ளதை அடுத்து சில சர்ச்சையான நிகழ்வுகளும் நடந்தது என்பதை பார்த்தோம். குறிப்பாக இந்த பாடலை பயன்படுத்தியதற்கு என்னிடம் அனுமதி வாங்கவில்லை என இசைஞானி இளையராஜா ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ படக்குழுவினர்களுக்கு அனுப்பிய நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் படக்குழுவினர்களோ இந்த பாடலுக்கு உரிமையுள்ள நிறுவனத்திடம் அனுமதி வாங்கி தான் பயன்படுத்தினோம் என்று கூறிய நிலையில் இந்த பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராத நிலை உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான பிருத்விராஜ் நடித்த ’குருவாயூர் அம்பலநடையில்’ என்ற திரைப்படத்தில் சுந்தர் சி இயக்கிய ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் இடம்பெற்ற ’அழகிய லைலா’ என்ற பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றி தமிழ் சினிமாவில் பல புதிய கதவுகளைத் திறந்தது. இதற்குப் பிறகு ஏராளமான நகைச்சுவைத் திரைப்படங்கள் குவியத் தொடங்கின. ரம்பாவிற்கு பெரிய பிரேக் தந்து, அவரது காலை கணிசமான தொகைக்கு இன்ஸூரன்ஸ் செய்ய வைத்தது இந்தப் படம்தான். இதில் வரும் ‘அழகிய லைலா’ பாடலை, அந்தக் காலத்தின் ‘ரா நூ காவாலய்யா’ எனலாம்.

இந்த பாடலை கம்போஸ் செய்த இசையமைப்பாளர் சிற்பி சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த பாடலை பயன்படுத்த தன்னிடம் யாரும் அனுமதி கேட்கவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த பாடலுக்கு உரிமையுள்ள இசை நிறுவனத்திடம் படக்குழுவினர் அனுமதி வாங்கி இருப்பதாக கேள்விப்பட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தான் சட்ட ரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி பட குழுவினர்களிடமிருந்து பணமும் கேட்கப்போவதில்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் என்னுடைய பெயரை கிரெடிட் ஆக போட்டால் மட்டும் போதும் என்றும் கூறினார். மேலும் இதுவரை நான் இந்த படத்தை பார்க்கவில்லை, இனிமேல் படம் பார்த்து என்னுடைய பெயர் இல்லை என்றால் அவர்களிடம் கோரிக்கை வைப்பேன்’ என்றும் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “‘அழகிய லைலா’ பாடல் இத்தனை வருடங்களுக்கு அப்புறமும் பெரிசா கொண்டாடப்படுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ’குருவாயூர் அம்பலநடையில்’ படத்தைப் பார்த்துட்டு நிறைய பேர் எனக்கு போன் பண்ணி சந்தோஷப்பாட்டாங்க. ’அழகிய லைலா’ பாடலின் உரிமை யாரிடம் இருக்கோ அவங்களுக்குத்தான் சொந்தம். ’உள்ளத்தை அள்ளித்தா’ உரிமையைத் தயாரிப்பாளரிடமிருந்து ’லஹரி’ மியூசிக் வாங்கியிருக்காங்க.

அவங்களுக்குத்தான் உரிமை இருக்கு. அவங்கதான் பர்மிஷன் கொடுக்கணும். என்கிட்ட பர்மிஷன் வாங்கணும்னு அவசியம் கிடையாது. அதுல எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. நான் லஹரி மியூசிக் நிறுவனத்துக்கு போன் பண்ணிக் கேட்டேன். அவங்க முறையா அனுமதி வாங்கித்தான் பயன்படுத்தியிருக்காங்கன்னு சொன்னாங்க. ஆனா, அந்தப் பாடலின் இசையமைப்பாளர் என்கிற முறையில் என் பெயரை கிரெடிட்ல போடணும். அதுதான் என்னோட விருப்பம்.

நான் பணமெல்லாம் எதிர்பார்க்கல. தேங்க்ஸ் கார்டுலயாவது என் பெயரைப் போட்டிருக்கணும். அதுவும் போட்டாங்களான்னு எனக்குத் தெரியல. ஏன்னா, நான் இன்னும் படம் பார்க்கல. என் பேரு போட்டிருந்தா எனக்கு சந்தோஷம். நான் இசையமைத்த ‘அழகிய லைலா’ மட்டுமில்ல, ’கொட்டப்பாக்கும்’, ’ஏலேளங்கிளியே’, ’செவ்வந்தி பூவெடுத்து’ பாடல்களெல்லாம் இப்போ ட்ரெண்டிங்கில் இருக்கு” என்றார். இசையமைப்பாளர் சிற்பியின் என்ற பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் இளையராஜா இவரை பார்த்தாவது திருந்த வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.