மக்களை மட்டுமில்லை.. அரசாங்கத்துக்கும் ஆல்வா கொடுத்த சம்பவம்… சிக்கல் மேல் சிக்கலில் ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சி..

0
Follow on Google News

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி கடந்த 10ம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான பொதுமக்கள் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தங்களது வாகனங்களில் வந்தனர். இதனால் ஓ.எம்.ஆர், பனையூர், ஈசி.ஆர் ஆகிய சாலைகளில் சுமார் 3 மணி நேரங்களாக கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகி வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

குறிப்பாக இந்த வாகன நெரிசலில் முதல்வரின் கான்வாய் வாகனமும் சிக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இசை நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்கள் பலரும் அரங்கத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் சீட் ஒதுக்கீடுகள் சரியில்லை என்றும் டிக்கெட் எடுத்த பலரையும் திருப்பி அனுப்பியதாக கூறி சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் குளறுபடி ஏற்பட காரணம் குறித்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டார். மேலும் முதற்கட்ட விசாரணையில் இந்நிகழ்ச்சியில் 25,000 பேர் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக காவல்துறையிடம் அனுமதி பெற்றதும், அதை விட அளவுக்கதிகமாக கூட்டம் வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் 6000 கார்கள் பார்க்கிங் செய்ய வசதி செய்யப்பட்டிருந்த நிலையில் 10,000க்கும் மேற்பட்ட கார்கள் வந்ததால் இடமில்லாமல் சாலைகளில் நிற்க வைத்து சென்றதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதும் தெரியவந்தது. கடந்த மாதம் 12ம் தேதி இந்நிகழ்ச்சி மழையால் ரத்தான நிலையில் அதற்கான டிக்கெட்டை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதனை காவல்துறையிடம் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் சரியாக தெரிவிக்காததால் குளறுபடி ஏற்பட்டது தெரியவந்தது.

மேலும் இதுபோன்ற ஒரு மோசமான இசை நிகழ்ச்சியைப் பார்த்ததே இல்லை என்றும் சிலர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அதோடு கூட்டத்தில் பெண்கள் சிலருக்கு பாலியல் ரீதியான அத்துமீறல்கள் நடந்ததாக அதிர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதுபோன்று ஏகப்பட்ட குளறுபடிகள் நிகழ்ச்சியில் ஏற்பட அது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பனையூரில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெற்றதில் ஏற்பட்ட குளறுபடி சம்பந்தமாக ACTC நிறுவனத்தின் மேலாளர் மீது கானத்தூர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதன்படி, இந்திய தண்டனைச் சட்டம் 406 தன்னுடைய சுய லாபத்திற்காக மக்களை ஏமாற்றம் செய்தது, 188 அதிகப்படியான மக்களை கூட்டியதற்கும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்தது என ACTC நிறுவன இயக்குநர் ஹேமந்த் மற்றும் செந்தில்வேலன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக கேளம்பாக்கம் உதவி ஆணையர் ரவிக்குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் பொதுவாக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் பொழுதுபோக்கு வரியின் கீழ் சென்னை மாநகராட்சிக்கு விற்கப்பட்ட ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் குறிப்பிட்ட தொகையை கொடுக்க வேண்டும். ஆனால் இந்த நிறுவனம் அதனை கொடுக்காமல் வரி ஏய்ப்பு செய்துள்ளது.

இதனால் இந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இருக்கையை விட அதிகமாக டிக்கெட் விற்பனை செய்து பொதுமக்களுக்கு விபூதி அடித்தது மட்டுமில்லாமல் வரி ஏய்ப்பு செய்து அரசாங்கத்துக்கே ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்துள்ளது மிக பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது.