ஏ.ஆர்.ரகுமான் இசை கச்சேரி , உயிர் பிழைத்தால் போதும்… தப்பித்து ஓடிய மக்கள்.. விசாரணையை

0
Follow on Google News

தொடங்கிய போலீசார்.. தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியை சென்னை பனையூரில் ஆகஸ்ட் 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மழையின் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் என்றும் முன்பு ரசிகர்கள் வாங்கிய டிக்கெட் செல்லுபடியாகும் என்றும் ஏ.ஆர்.ரகுமான் அறிவித்திருந்தார்.

இதையடுத்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை actc events என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தனர். ஆன்லைனில் 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே இருக்கைகள் போட்டுவிட்டு லட்சக்கணக்கானோரை விழா ஏற்பாட்டாளர்கள் அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிக்ழ்ச்சிக்கு வந்தவர்கள் நிற்க கூட முடியாமல் தவித்தனர். சில்வர், கோல்டு, பிளாட்டினம், டயமண்ட் என 4 பிரிவுகளின் கீழ் டிக்கெட் கொடுக்கப்பட்டு 4 நிறங்களில் டேக் கட்டப்பட்டது.

ஆனால் அவர்களால் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் இருந்தது. இதனால் குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர் கடுமையாக அவதிப்பட்டனர். ஒரு கட்டத்தில் மூச்சுவிட முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டதால் உயிர் பிழைத்தால் போதும் என நினைத்து வெளியே வந்துவிட்டனர். இன்னும் சிலர் டிக்கெட்டை வைத்துக் கொண்டு நிகழ்ச்சிக்கு உள்ளே கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் பலர் திரும்பி சென்றனர். இதுகுறித்து விழா ஏற்பாட்டாளர்கள் வருத்தம் தெரிவித்து ட்வீட் போட்டிருந்தனர், எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் வந்ததே ரசிகர்களுக்கு நடந்த இடையூறுக்கு காரணம் என கூறி இதற்கு முழு பொறுப்பு ஏற்பதாகவும் கூறியிருந்தார்கள். ஆனால் காவல் துறையினரோ இசை நிகழ்ச்சியில் நடந்த பிரச்சினைகளுக்கு விழா ஏற்பாட்டாளர்களே காரணம். முதல்வரின் கார் கூட சிக்கும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் பல ஆயிரம், லட்சங்களை செலவு செய்து டிக்கெட் வாங்கியோர் நிகழ்ச்சியை காண முடியாததால் கடும் அதிருப்தி அடைந்தனர். இதற்கு ஏ.ஆர்.ரகுமான் அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அன்பான சென்னை மக்களே, இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட்டை வாங்கிவிட்டு துரதிருஷ்டவசமாக உள்ளே செல்ல முடியாமல் திரும்பி சென்றவர்கள் தயவு செய்து டிக்கெட் நகலை அனுப்பி வையுங்கள்.

எங்கள் குழுவினர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள்” என தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி விவகாரம் தொடர்பாக இசை நிகழ்ச்சிக்கு தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி அங்கு ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து நேரில் சென்று விசாரணை நடத்த தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜிக்கு தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நிகழ்விடத்தில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் கூறியதாவது,

“இசை நிகழ்ச்சி ஏற்பாடு கடந்த ஒரு வாரமாக நடைபெற்றது. எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் இருந்தது. 25,000 இருக்கைகள் போடப்பட்டது. 40,000 பேர் வரை வந்ததாக தெரிகிறது. சொந்த வாகனங்களில் அதிகபடியானோர் வந்ததால் வாகனங்களை தடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குளறுபடிகான காரணம் குறித்து விசாரிக்கவும், ஏற்பாடுகள் குறித்தும் விசாரணை செய்யப்படும்” என தெரிவித்தார்.

மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை விசாரணைக்கு ஆஜராகும்படி காவல்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ACTC நிறுவன பிரதிநிதிகள் ஹேமந்த்குமார் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலத்தில் ஆஜராகினர். அவர்களிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இசை நிகழ்ச்சிக்கு செய்த ஏற்பாடுகள் குறித்து அவர்கள் விளக்கம் அளித்தனர். அப்போது வாகனங்கள் நிறுத்த தேர்வு செய்த இடம் சேறும் சதியுமாக காணப்பட்டதால் அங்கு வாகனங்களை நிறுத்த முடியாமல், ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தியதும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாகியது என்றனர். மேலும் முப்பதாயிரம் இருக்கையே போடப்பட்டிருந்தது என்ற குற்றச்சாட்டிற்கு 50 ஆயிரம் பேருக்கு இருக்கைகள் போடப்பட்டு இருந்ததாக கூறினர்.