தமிழகத்தில் வீசிய கொரோனா அலையால் திரையரங்குகள் எல்லாம் மூடப்பட்டது. இதனால், பெரும்பாலான படங்கள் முடிவடைந்த நிலையிலும் வெளியிடமுடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து வந்தனர். இவர்களுக்கு அந்த நிலையில் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது ஓடிடி தளங்கள்தான். முடிவடைந்து கிடப்பில் போடப்பட்டிருந்த முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்தும் ஓடிடி தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றன.
திரையரங்குகள் திறப்பதற்கு காலதாமதமாகிக் கொண்டிருந்தவேளையில், பல படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர்கள் முயற்சி செய்து வந்தனர். தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த வாரம் முதல் தியேட்டர்களில் படங்கள் வெளியாகி ஓடிவருகிறது. இந்நிலையில், ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு தியேட்டர் ஒதுக்க முடியாது என்று திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இதனால், ஓடிடி தளத்திற்கு படத்தை கொடுத்த தயாரிப்பாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். திரையரங்கு உரிமையாளர்கள் இதுகுறித்து கூறும்போது, ஓடிடி தளங்களில் வெளிவந்த, இனி வரவிருக்கும் படங்களுக்கு திரையரங்குகளில் திரையிடமாட்டோம். திரையரங்குகளில் வெளியாகி 4 வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளிவருவதாக இருந்தால் மட்டுமே படங்களை திரையிடுவதற்கான ஒப்பந்தம் போடப்படும். ஓடிடியில் விற்பனையான படங்களுக்கான பிரிவியூ காட்சிகளுக்கும் தியேட்டர்கள் கொடுக்கமுடியாது என்று முடிவு செய்துள்ளனர்.