மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் விக்ரம், தங்கலான் படத்திற்காக நீண்ட தாடி, தலைமுடியுடன் பண்டைய கால காட்டுவாசி போல வித்தியாசமான தோற்றத்துடன் உடலை வறுத்திக்கொண்டு நடித்துள்ளார். விக்ரமை பொருத்தவரை நடிப்பு என்று வந்துவிட்டால், மனுஷன் இறங்கி நடித்து விடுவார். அதற்கு உதாரணமான ஐ படம், கோப்ரா படத்தை சொல்லலாம்.
இந்த இரண்டு படத்திலும் கெட்டப்பை மாற்றி நடித்திருப்பார். தங்கலான் படத்தின் தோற்றத்திற்காக விக்ரம் பல மணிநேரம் மேக்கப் போட்டு நடிக்கிறார். இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை பார்த்த போது, இதற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் எப்படி கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து உள்ளனர் என்பதை பார்க்க முடிந்தது. விக்ரம் மட்டுமில்லாமல், மாளவிகா மோகன், பார்வதி திருவோத்து, பசுபதி என ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களது கதாபாத்திரம் திரையில் சிறப்பாக வரவேண்டும் என்று, உடலை கஷ்டப்படுத்திக்கொண்டு நடித்துள்ளனர்.
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான தங்கலான் படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 15ந் தேதி வெளியாக உள்ளது. ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற மினிக்கி மினிக்கி பாடல் தற்போது இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்கிறது.
ஆங்கிலேயர் காலத்தில் நடந்த கேஜிஎஃப் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படம் ஆஸ்கருக்கு விண்ணப்பித்து இருப்பதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்து இருந்தார். தங்கலான் படத்தின் முன்பதிவு 10ந் தேதி தொடங்கிய நிலையில், ப்ரீ புக்கிங்கில் மட்டும் ரூ. 1.8 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமில்லாமல், தங்கலான் திரைப்படத்தின் தமிழக திரையரங்க உரிமை ரூ. 25 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தங்கலான் படம் குறித்து இயக்குனர் பிரவீன் காந்தி கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “தங்கலான் படத்தை சத்தியமாக பார்க்கவே மாட்டேன். அதுவும் பா. ரஞ்சித் படம் என்றாலே பார்க்க மாட்டேன் என்ற முடிவோடுதான் இருக்கேன். இதில் தங்கலான் படமும் அடங்கும். ஒரே அழுக்காக நடிப்பதெல்லாம் பெரிய ஹீரோயிசமா.
அந்த காலத்தில் கர்ணன் திரைப்படத்தையே எந்தளவுக்கு அழகாக பிரம்மாதமாக எடுத்திருந்தார்கள். ஆனால் இந்தப் படம் முழுவதும் அழுக்காக இருக்கிறது. ஹீரோ என்றால் எப்படி இருக்க வேண்டும்? இந்த மாதிரி உடம்பு முழுக்க அழுக்கு பூசிக் கொண்டு இருந்தால் நன்றாகவா இருக்கிறது? படமா எடுக்குறாங்க? ஒரே வன்முறையாகத்தான் இருக்கிறது. அதனால்தான் ராயன் திரைப்படத்தையும் நான் பார்க்கவில்லை. எனக்கு ரத்தம் என்றாலே ஒரு அலர்ஜி.
இப்ப உள்ள தலைமுறைகளுக்கு என்ன மாதிரியான கருத்தை கொடுக்க வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. அதுவும் 16 லிருந்து 20 வயது உள்ளவர்கள் எதையும் சீக்கிரம் உள்வாங்கிக் கொள்ளும் வயதுடையவர்கள். அவர்களிடம் இந்த மாதிரியான கத்தி, கொலை, கொள்ளை என படங்களின் மூலம் காட்டுவது சரியா? அதனால்தான் ராயன் மற்றும் தங்கலான் படங்களை பார்க்க மாட்டேன்” என கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அறியப்பட்டவர் பிரவீன் காந்தி. இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இவர் மத்தியில் இயக்குனர் பிரியதர்ஷன் இடம் தான் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். அதற்குப் பிறகு 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ரட்சகன்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆகியிருந்தார். சமீப காலமாக இவர் படங்களை இயக்குவதில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.