லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள இரண்டாவது திரைப்படம் லியோ. அதிரடி ஆக்ஷன் படமான இதில் விஜய் உடன் திரிஷா, பிரியா ஆனந்த், மடோனா செபஸ்டியன், சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், கவுதம் மேனன், ஜார்ஜ் மரியான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.
லியோ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. தமிழகத்தில் 9 மணிக்கு தான் லியோ முதல் காட்சி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டாலும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே லியோ படம் ரிலீஸ் ஆகிவிட்டது.
முதல் ஷோ பார்த்த மலையாள ரசிகர்கள் படம் வேற லெவலில் உள்ளதாக கருத்து தெரிவித்து இருந்தாலும். மலையாள விஜய் ரசிகர்களை தாண்டி பொதுவாக வந்து பார்த்த ஆடியன்ஸ்க்கு இந்த படம் ஓரளவு பிடித்துள்ளது. படத்தின் முதல் பாதி சிறப்பாக உள்ளதாகவும் விஜய் நடிப்பும் நன்றாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் படம் முழுவதும் இடம்பெறும் புகைப்பிடிக்கும் காட்சிகள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
படத்தில் முற்றிலும் வேறு விதமான விஜயை பார்க்க முடிகிறது. ஆம், அன்பு பொழியும் அப்பாவாக, பொறுப்புள்ள கணவனாக, குடும்பத்துக்காக பொங்கி எழும் பார்த்தியாக, கில்லாடி லியோவாக நடிப்பில் வேரியேஷன் புகுத்தி வியப்பு காட்டுகிறார். குறிப்பாக லோகேஷின் பிரேமில் விஜய் வரும் சில இடங்கள் கிளாஸ் ரகத்தை சேர்ந்தவை. விஜய், திரிஷா காதலில் அவ்வளவு ஆழம் இருந்தது. ஆனால் அந்த காதலை இன்னும் ரசிக்கும் படியாக அமைத்து இருக்கலாம்.
முதல் பாதியில் கதையை பிட்ச் செய்ய நேர்த்தியான திரைக்கதையை கையாண்ட லோகேஷ், இரண்டாம் பாதியில் அதை கோட்டை விட்டு இருக்கிறார். ஆம், லோயோவிற்கு ஏற்பட்ட இழப்பிற்கு அவர் வைத்த காரணம் இன்னும் ஸ்ட்ராங்காக இருந்திருக்க வேண்டும். ஆனால், அதை கொஞ்சம் மறக்கடித்து திரையை நோக்கி நம்மை இழுத்து செல்வது விஜயின் நடிப்பும், ஆக்ஷனும் தான். பின்னணி இசையில் அனிருத் முழு பலம் கொடுத்து தாங்கி இருக்கிறார்
எல்.சி. யூ கனெக்ட் சுவாரசியம் கூட்டியது. இதற்கு முன்னதாக லோகேஷ் படங்களில் இரண்டாம் பாதி எப்போதுமே தாண்டவமாக அமைந்து இருக்கும். ஆனால் அது இதில் மிஸ்ஸானது சற்று ஏமாற்றம் தான். மேலும் சிங்கமாக எடுக்க நினைத்து, பூனையை லோகி எடுத்து வைத்துள்ளார் லோகேஷ் என படம் பார்த்தவர்கள் புலம்பி வருவதை பார்க்க முடிகிறது. விஜய் மற்ற நடிகர்கள் என அனைவரும் கலக்கி இருந்தாலும், படத்தின் கதை சரியாக இல்லை. லோகேஷ் கனகராஜின் லியோ எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது. இது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது.
மேலும் விக்ரம் அல்லது கைதிக்கு அருகில் இந்தப் படம் இல்லை, இது லோகேஷ் கேரியரில் மிகவும் பலவீனமான படமாக அமைத்துள்ளது. லியோ டெரிஃபிக் முதல் பாதி.. இரண்டாம் பாதி ஏமாற்றம்.. விஜய் பார்த்தியாக மிக நன்றாக இருந்தார். ஆனால் லியோ தாஸ் கேரக்டர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை மற்றும் வாடிக்கையாக இருந்தது.. பிஜிஎம் அட்டகாசமாக இருந்தது.
அதுமட்டுமின்றி லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் சார்ந்த காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதாகவும் பலர் தெரிவித்துள்ளனர். ஆனால் இரண்டாம் பாதி இழுவையாக செல்வதாகவும், ஆக்ஷன் காட்சிகள் மட்டும் சிறப்பாக உள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் லோகேஷின் முந்தைய படங்களான கைதி விக்ரம் போன்ற படங்களுடன் ஒப்பிட்டால் லியோ குறைவுதான் என்றும் கருத்துக்கள் எழுந்துள்ளது. எனவே கதையின் ஆழத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால், லியோவை கொண்டாடி இருக்கலாம்.