அய்யோ அம்மா அடிக்காதீங்க… போலீஸ் அடி தாங்காமல் கதறிய விஜய் ரசிகர்கள்

0
Follow on Google News

சினிமாவைக் கொண்டாடுவதில் தமிழ் ரசிகர்களை மிஞ்ச யாருமில்லை என்று கூறலாம். அந்தளவிற்கு தனக்குப் பிடித்த ஹீரோக்களின் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது என்றால், மிகப்பெரிய பேனர், கட்டவுட் மற்றும் பட்டாசுகள் என தியேட்டர்கள் முன்பு திருவிழாவே கொண்டாடி விடுவார்கள் ரசிகர்கள். நேற்று ஏராளமான திரையரங்குகளில் ரிலீஸ் ஆன லியோ திரைப்படத்திற்கும் அப்படித்தான்.

நேற்று கூட விழுப்புரத்தில் தியேட்டரின் முன் திரண்டு வந்த விஜய் ரசிகர்களை போலீசார் விரட்டியடித்துள்னர். பெரும்பாலான ரசிகர்கள் தியேட்டர் முன் மிகப்பெரிய பேனர், கட் அவுட், அலங்காரம் என பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தாலும் ஒரு சிலர் செய்யும் அட்டூழியங்களால் பொது மக்கள் பாதிக்கப்படுவதுடன் தியேட்டர் நிர்வாகமும் பாதிக்கப்படுகிறது.

இப்படிதான், லியோ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆன போதும் சென்னையில் உள்ள ரோஹினி தியேட்டரில் தலைகீழாக ஆட்டம் போட்டு இருக்கைகளை சேதப்படுத்தினர். மேலும், இதற்கு சுமார் ரூ.30 லட்சம் செலவழித்து 10 நாட்களில் சேதமடைந்தவற்றை மாற்றியமைத்ததாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதனாலேயே ரோஹினி தியேட்டர் லியோ படத்தை திரையிடவில்லை என்று பலகையையும் வைத்திருந்தது.

ஆனால், அதன் பிறகு ரோகிணியில் ‘லியோ’ படத்தை திரையிடுவது தொடர்பான பிரச்னைக்கு நேற்று மாலை தீர்வு காணப்பட்டது. இதையடுத்து ரோகிணி திரையரங்கில் டிக்கெட் வாங்குவதற்கு அலைகடலென திரண்டு வந்த விஜய் ரசிகர்கள் மீண்டும் தகராறு செய்துள்ளனர். ரோகிணி தியேட்டரில் டிக்கெட் வாங்குவதற்காக போட்டி போட்டுக் கொண்டு கூட்டம் கூட்டமாக குவிந்த விஜய் ரசிகர்களிடையே திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து திரையரங்கு வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ரசிகர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். காவல்துறையினரால் விஜய் ரசிகர்கள் விரட்டியடிக்கப்படும் காட்சி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படி சினிமா மீது வெறித்தனமாக இருப்பதாலும், அந்த சமயத்தில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் கண்ணுமுன்னு தெரியாமல் ஆட்டம் போடுவதாலும் தான் அதிகாலை காட்சிகளும், காலை 7 மணி சிறப்பு காட்சியும் வேண்டாம் என்று தியேட்டர் உரிமையாளர்களைச் சொல்ல வைத்தது என்று கருத்துகள் வெளியாகி வருகின்றன.

அதேபோல், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி என தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நேற்றிரவு டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்களால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. எனவே, படத்தைக் கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு மற்றவருக்கு இடையூறு இல்லாமல், பாதுகாப்பு கட்டுப்பாடுகளைக் கடைபிடித்து செயல்படுவது முக்கியம் என்பதை ரசிகர்கள் மனதில் கொள்வது நல்லது.