லோகேஷ் கனகராஜ்-விஜய் ஆகியோர் இரண்டாவது முறையாக கைக்கோர்த்துள்ள படம், லியோ. கிட்டத்தட்ட ஓராண்டாக நடைப்பெற்று வந்த இப்படத்தின் பணிகள், ரிலீஸிற்கு சில வாரங்களுக்கு முன்புதான் முடிவுற்றது. உடனே படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் ஆரம்பிக்க தொடங்கின. ஒரு வழியாக படம் வெளியானது. இந்தப் படமானது மல்டி ஸ்டாரர் படமாக உருவாகியிருக்கிறது.
விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், அனுராக் காஷ்யாப், சாண்டி மாஸ்டர், மாத்யூ தாமஸ் என பெரும் நட்சத்திர பட்டாளமே இதில் களமிறங்கியிருந்தது. இத்தனை பேரை லோகேஷ் எப்படி வேலை வாங்கியிருப்பார் என்பதை பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர். மேலும், இப்படம் எல்.சி.யூவில் இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு அதிகமாகவே இருந்ததுதான். இப்படத்திற்கு மக்களின் வரவேற்பு பலமாகவே கிடைத்துள்ளது.
ஆனாலும், ரசிகர்கள் சிலர் படத்தில் உள்ள குறைகளை லிஸ்ட் போட்டு சமூக வலைதளங்களில் விவாத பாெருளாக மாற்றி வருகின்றனர். ரசிகர்கள் அனைவரையும் லியோ படம் திருப்தி படுத்தியதா என்று கேட்டால் அது கேள்விக்குறியாக இருக்கிறது. அதாவது படம் பார்க்க ஆரம்பத்தில் நல்லா தான் இருக்கு. ஆனால் போகப் போக கழுத கெட்டு கட்டெறும்பாக தேய்வது போல படத்தில் நிறைய காட்சிகள் இருக்கிறது.
முக்கியமாக இந்த படத்திற்கு இவர்கள் எல்லாம் தேவையே இல்லை என்று சொல்லும்படியான கேரக்டர்கள் அமைந்திருக்கிறது என்று கூறி வருகின்றனர். லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பல காட்சிகளில் இசை இறைச்சலாக இருப்பதாகவும், சில வசனங்களை தெளிவாக கேட்க கூட முடியவில்லை என்றும் சில ரசிகர்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.
இதையடுத்து, “நான் ரெடி” பாடலில் விஜய்க்கு நல்ல நடன ஸ்டெப்ஸ்களை சொல்லி கொடுத்திருக்கலாம் என்றும் சில ரசிகர்கள் கூறி வருகின்றனர். லியோ படத்தின் முதல் பாதிதான் நன்றாக இருந்ததாகவும் இரண்டாம் பாதி லோகேஷ் கனகராஜ்ஜின் இயக்கம் போலவே தெரியவில்லை என்றும் சில ரசிகர்கள் கருத்துகளை கூறியுள்ளனர்.
லியோ படம், தமிழ் சினிமாவில் இதற்கு முன்னர் வந்த அதே ஆக்ஷன் த்ரில்லர் படங்களின் டெம்ப்ளேட் கதைதான் என்று லோகேஷ் கனகராஜ் முன்னரே ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். படமும், அதே போன்ற கதையாகத்தான் வந்துள்ளது. இதனால் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். லோகேஷ் கனகராஜ்ஜிடம் அதிகமாக எதிர்பார்த்தாகவும், படம் தாங்கள் நினைத்தது போல இல்லை என்றும் சில விஜய் ரசிகர்களே கூறி வருகின்றனர்.
மேலும் லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களின் சாயல் சிறிது கூட இந்த படத்தில் இல்லை என்றும் கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களில் இருந்த மாஸ் காட்சிகள் எதுவும் இந்த படத்தில் இல்லை என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கான கதையே இல்லை என்றும் விஜய் இந்த கதையை கேட்டு எப்படி ஏமாந்தார் என்றும் தெரியவில்லை என்றும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
அட்லியே இந்த கதை வேண்டாம் என்று சொல்லி இருப்பார் என்றும் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த படம் முழுக்க முழுக்க ரத்னகுமார் படம் தான் என்றும் ரத்னகுமார் தான் இந்த படத்தை இயக்கியிருப்பார் என்றும் ரசிகர்கள் ஆன்லைனில் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், சினிமா துறையில் லியோ திரைப்படம் தமிழகத்தில் சுமார் 30 கோடி வசூலை தாண்டியுள்ளதாகவும், உலகம் முழுவதும் லியோ திரைப்படம் 80 கோடி ரூபாய் வசூலை தாண்டி இருக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் ஜெயிலரின் முதல் நாள் வசூலை உலக அளவில் லியோ திரைப்படம் முறியடிக்க வில்லை. ஆனால் தமிழகத்தில் ஜெயிலர் முதல் நாள் வசூலில் 25 கோடி வசூல் செய்திருந்தது. அந்த சாதனையை மட்டும் லியோ திரைப்படம் முறியடித்திருக்கிறது.