நடிகர் மற்றும் அரசியல்வாதி கமல்ஹாசன் கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் கமல்ஹாசன் இப்போது விக்ரம் படப்பிடிப்பு மற்றும் பிக்பாஸ் படப்பிடிப்பு என பிஸியாக வலம் வந்து கொண்டிருந்தார்.
இதற்கிடையில் அவர் அமெரிக்கா சென்று வந்த நிலையில் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தோன்றியதை அடுத்து மருத்துவமனையில் சோதனை செய்துகொண்டதில் தொற்று உறுதியானது. இதையடுத்து இப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் அனுமதிக்கப்பட்டுள்ல போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் தினமும் அவர் உடல் நலம் குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.
இது சம்மந்தமாக இன்று வெளியாகியுள்ள அறிக்கையில் ‘22ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்ததன் பயனாக தற்போது அவர் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டார். இருப்பினும் அவர் டிசம்பர் 3ஆம் தேதி வரை தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி முதல் கமல்ஹாசன் தன்னுடைய வழக்கமான பணிகளை தொடரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.