பட்டாசு ஆலைகளை மூடச் சொல்லி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா? என்று திமுக பொதுசெயலாளர் துரைமுருகனுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை அருகே உள்ள அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர்களுக்கு மாநில அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்.
சாத்தூர், வெம்பக்கோட்டை, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி உயிர் இழப்பு ஏற்படுவதால் தி.மு.க உள்ளிட்ட சில இயக்கங்கள் பட்டாசு தொழிலை நிறுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். உயிரிழப்பு என்பது எல்லா தொழிலிலும் இருக்கிறது. ஆனால் பட்டாசு தொழிலில் மட்டும் உயிரிழப்பு வெளியில் தெரிகிறது. எனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பட்டாசு விபத்து உயிரிழப்பை தடுக்க விரைவான நடவடிக்கை எடுத்துள்ளார், நிவாரணமும் அறிவித்துள்ளார், ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் எண்ணம்.
ஆனால் பட்டாசு தொழிலை நிறுத்த வேண்டும், பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை கெடுக்க வேண்டும் என்று தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை விடுத்தது சங்கடமாக உள்ளது. பட்டாசு தொழிலாளர்கள் இன்று உயிர் இழந்தாலும் அவர்களது உறவினர்கள் மறுநாள் வேலைக்கு செல்லும் நிலையில் தான் உள்ளனர். இந்த நிலையில் தி.மு.க.வினர் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் பட்டாசு தொழிலை நிறுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்.
பட்டாசு தொழில் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா காலத்திலேயே பட்டாசு பயிற்சி மையம் உருவாக்கப்பட்டது. பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு நல வாரியத்தை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். பட்டாசு தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதையும் தாண்டி ஒரு சில விபத்து ஏற்படுகிறது. முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி தலைமை செயலர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
பட்டாசு தொழிலாளர் நல சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விபத்துகள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பாக தொழிலை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அனைவருமே பிழைப்பதற்குதான் வேலைக்கு வருகிறார்கள். யாரும் சாக வரவில்லை. எந்த முதலாளிகளும் சாக வேண்டுமென்று வேலை கொடுப்பதில்லை. விபத்து எதிர்பாராமல் வருவது. வராமல் இருப்பதற்கு என்ன செய்வது என்பதை ஆராய வேண்டும். விபத்து ஏற்படாமல் தடுப்பதற்காகவே பட்டாசு தீப்பெட்டி தொழிலுக்கு என்று நலவாரியத்தினை முதலமைச்சர் ஏற்படுத்தியுள்ளார். அரசு அதிகாரிகள் சரியில்லை, அரசியல்வாதிகள் சரியில்லை என்று குறிப்பிடுவது பொத்தாம் பொதுவாக கூறக்கூடிய குற்றச்சாட்டு.
தாய், தந்தையை இழந்த நடுசுரங்குடி நந்தினிக்கு தேவையான படிப்பு செலவினை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அந்த குழந்தைக்கென தனி கவனம் செலுத்தி எங்கள் வீட்டுப் பிள்ளையாக நாங்கள் கவனித்துக் கொள்வோம். அந்த குழந்தையை கவனித்துக் கொள்வது எங்கள் பொறுப்பு. இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.