எல்லா பிரச்சினைகளையும் தாண்டி தற்போது காமெடி நடிகர் வடிவேலு மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார். சுராஜ் இயக்கும் ‘நாய் சேகர்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வடிவேலு கூறும்போது, ‘நான் சினிமாவுக்கு வந்து எத்தனையோ வருஷம் ஆனாலும், இதுவரை எதுவும் பெருசா சாதிச்சிட்டதா நினைக்கல. இன்னும் சாதிக்கிறது நிறைய இருக்கு. அதேபோல், இனிமேல் ராஜா வேஷமோ, எமதர்மன் வேஷமோ போட மாட்டேன். இப்படி எப்படி இருக்கேனோ அதே மாதிரிதான் கேரக்டர்லதான் நான் நடிப்பேன். கலைத்தாய் மீது ஆணையா இனிமேல் வரலாற்று படங்களில் நடிக்க மாட்டேன்.
ஜனங்க எல்லாத்தையும் சந்தோஷமாக வச்சிக்கிட்டு, அவங்கள சிரிக்க வைக்கிற இந்த வேலை எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு. குழந்தைங்க வரைக்கும் என்னை நல்லா அடையாளம் தெரிஞ்சுக்கிட்டு என்னை மாதிரியே பாவனையெல்லாம் கொடுக்கிறது கடவுள் எனக்கு கொடுத்த வரம்னுதான் சொல்லணும்.
என்னை வைத்து நிறைய மீம்ஸ் எல்லாம் போடறாங்க. அதையெல்லாம் நான் பார்ப்பேன். ஆனால், நான் எந்த சமூக வலைத்தளத்திலும் இல்லை. என் பேர்ல வர்ற சமூக வலைத்தளங்கள் எல்லாமே போலி. ஆத்தாடி, அது நான் இல்லைங்க’ என்று தனக்கே உரித்தான காமெடியுடன் கலகலப்பாக அந்த பேட்டியை முடித்தார் வடிவேலு.