தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. 70களில் இசை பயணத்தை தொடங்கிய இவர் சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வந்தார். சுமாரான படம் என்றாலும் இளையராஜாவின் பாடல்களுக்காகவே படம் சூப்பர் ஹிட் ஆகிவிடும் காலம் இருந்தது. இதனாலையே அன்றைய காலகட்டத்தில் இளையராஜாவிடம் பாடல்களை வாங்க இயக்குனர்கள் போட்டி போட்டு காத்திருந்தார்கள்.
இப்படி பல்வேறு படங்களுக்கும் இசையமைப்பதில் செம பிஸியாக இருந்த இளையராஜா ஒரே நாளில் பல பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்து இருக்கிறார். இவர்கிட்ட தட்ட 5000 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இன்று வரை இளையராஜாவின் இரவு நேர மெலோடிஸ் கேட்பதற்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த அளவிற்கு இனிமையான எவர்கிரீன் பாடல்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்திருக்கிறார்.
படத்தின் பாடல்களுக்கு மட்டும் இன்றி பின்னணி இசையிலும் இளையராஜாவை அடிச்சுக்க ஆளே கிடையாது. படத்தில் இடம் பெறும் காட்சிகளுக்கு ஏற்ப கச்சிதமான பின்னணி இசையை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார். இசையமைப்பதில் இவ்வளவு திறமை கொண்ட இளையராஜாவுக்கு படத்தை இயக்குவதிலும் ஆர்வம் இருந்திருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
எண்பதுகளில் பல படங்களுக்கு இசையமைப்பதற்காக பிஸியாக வேலை பார்த்துக் கொண்டிருந்த இளையராஜா, மியூசிக் போடுவது மட்டுமின்றி பாடல்களை எழுதுவது பாடுவது என அனைத்திலும் ஆர்வத்துடன் வேலை பார்த்திருக்கிறார். மேலும், இவர் பல்வேறு படங்களை தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் பின்னணி இசைக்காக அவரிடம் வரும் இயக்குனர்களிடம், படத்தில் மாற்ற வேண்டிய சில விஷயங்களை கூறுவாராம்.
இளையராஜா சொன்னபடி மாற்றங்களை செய்தால் படத்தின் வெற்றிக்கு உதவும் என்று புரிந்து கொண்டு இயக்குனர்களும் அதன்படி செய்வார்களாம். இப்படி இளையராஜா ஆர்வத்துடன் நிறைய வேலைகளை செய்வதுண்டு. குறிப்பாக, இளையராஜா ஒரு படத்தை இயக்குவதற்கு கூட திட்டமிட்டு இருந்தாராம். ஆனால் அது நடக்கவில்லையாம். இது பற்றி இளையராஜாவே இயக்குன கௌதம் வாசுதேவ் மேனனிடம் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
அதில் பேசிய இளையராஜா “ரஜினி நடிப்பில் வெளியான ராஜாதி ராஜா படத்தை நான் தான் இயக்குவதாக இருந்தது. இதற்கு ரஜினியிடம் கேட்டபோது அவரும் சம்மதம் சொல்லி இருந்தார். படத்தின் டைட்டில் நான் தான் சொன்னேன். ஆனால் அந்த சமயத்தில் சில சூழ்நிலை காரணமாக என்னால் அப்படத்தை இயக்க முடியவில்லை. அதன் பிறகு அந்த படத்தை இயக்குனர் சுந்தர்ராஜன் இயக்கியிருந்தார். ” என்று இளையராஜா கூறியிருக்கிறார்.
இன்றைய தலைமுறை இளைஞர்களும் ரசிக்கும் படியாக இனிமையான மெட்டுக்களை போட்டு இசையமைத்த இசைஞானி இளையராஜாவுக்கு டைரக்ஷன் மீது ஆசை இருந்திருக்கிறது என்பது பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது.ஒருவேளை இளையராஜா அந்த படத்தை இயக்கியிருந்தால் இசையமைப்பாளராக மட்டுமின்றி இயக்குனராகவும் மிகப்பெரிய வெற்றியை கண்டிருப்பார்.