மாநாடு வெற்றியால் அதிக சந்தோஷத்தில் இருப்பது இவர்தான்!

0
Follow on Google News

மாநாடு படத்தின் வெற்றி அடுத்து சிம்பு நடிப்பில் உருவாகும் வெந்து தணிந்தது காடு படத்தின் வியாபாரத்துக்கு பெரிதும் உதவியாக அமையப்போகிறது. சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா மற்றும் எஸ் ஏ சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட இந்த படம் பல பிரச்சனைகளைத் தாண்டி நவம்பர் 25 ஆம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டு சிறப்புக் காட்சி எல்லாம் ரத்து செய்யப்பட்டாலும் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்தது. இதற்கு முன்னர் வெளியான சிம்பு படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை எல்லாம் மாநாடு முறியடித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு வெளியான படங்களில் அண்ணாத்த, மாஸ்டர், கர்ணன் ஆகிய படங்களுக்குப் பிறகு மிகப்பெரிய ஓபனிங் மாநாடு படத்துக்குதான் கிடைத்துள்ளதாம். முதல் நாளில் 8 கோடி வசூலித்த மாநாடு அதற்கடுத்த நாட்களில் அதிக வசூலை செய்து வருகிறதாம். இந்நிலையில் மாநாடு படத்தின் இமாலய வெற்றியால் அதிகமாக பயனடையப் போவது அடுத்து சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ்தானாம்.

மாநாடு வெற்றியால் அவர் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதாம். அந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை மற்றும் 25 கோடி ரூபாய்க்கு போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மாநாடு எனும் ஒரே படம் சிம்புவை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியுள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன.