இயக்குனர் அட்லீயின் படங்கள் வசூல் ரீதியாகக் கோடிகளைக் குவிக்கத் தவறியதில்லை. என்னதான் மிகப்பெரிய வசூல் வேட்டை இருந்தாலும், அட்லீயின் படத்தில் மற்ற படங்களின் கதை அம்சங்கள் இருப்பதாகவும், பல திரைக்கதைகளின் சாயல் இருப்பதாகவும் சினிமா ரசிகர்கள் அனைவரும் விமர்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல இயக்குனர் அட்லீ இயக்கிய படங்கள் அத்துனைக்கும் இதே விமர்சனங்கள்தான் வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால், அதை எதையும் காதில் போட்டுக் கொள்ளாத அட்லீ தனக்கான பாணியிலேயே படங்களை இயக்கி வருகிறார். சமீபத்தில் இவர் இயக்கிய ஜவான் படம் வெளியாகியது. ஷாருக்கான், தீபிகா படுகோன், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான இப்படத்தின் வசூல் இப்போது ஆயிரம் கோடி ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
பான்-இந்தியா படமாக வெளியான ஜவான் படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று கூறலாம். இந்த சூழலில், ஜவான் படத்தின் வெற்றி குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அட்லீ, அவரை விமர்சிப்பவர்களுக்கு நாசூக்காக பதிலளித்துள்ளார். அதாவது, “காப்பியடித்து படம் எடுக்கிறார்” ‘சுட்ட கதை’ என்றெல்லாம் அவரை விமர்சிப்பவர்களுக்கு பட்டும்படாமலும் ஒரு விஷயத்தை தெரிவித்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது; “ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான ரசனை இருக்கும், அதாவது, ஒரு சிலருக்கு செண்டிமென்ட் காட்சிகள் பிடிக்கும், சிலருக்கு ஆக்ஷன் காட்சிகள், மற்ற சிலருக்கு மாஸ் காட்சிகள் பிடிக்கும் . அப்படி இருக்கையில், பலதரப்பட்ட ரசனைகள் கொண்ட ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டுமெனில், ஒரு திரைப்படத்தில் பல கதைகள் இருப்பது என்னை பொறுத்தவரை அவசியம் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அட்லீ, “உதாரணத்திற்கு ஒரு திருவிழாவுக்கு சென்றால், அங்கே பெரிய பெரிய ராட்டினங்கள், பலவித உணவுகள், விளையாட்டுப் பொருட்கள் கிடைக்கும். இப்படி பல தரப்பட்ட விஷயங்கள் ஒரு திருவிழாவில் நமக்கு கிடைப்பதால், நாம் திருவிழா முடிந்து வீட்டுக்கு செல்லும்போது மனதிருப்தியுடன் செல்வோம்.
என்னுடைய இயக்குநர் பாணியும் அதேதான். என்னுடைய திரைப்படங்கள் உங்களுக்கு மிகச் சிறந்த ஒரு பொழுதுபோக்காக இருக்க வேண்டும் என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்து பேசுகையில், அப்படித்தான், ஜவான் படத்தையும் உருவாக்கியிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அப்படத்தில் ஒரு சில ரசிகர்களுக்கு தந்தை – மகன் உறவு பிடித்திருக்கும்.
சில ரசிகர்களுக்கு உணர்வு பூர்வமான காட்சிகள் பிடித்திருக்கும். இன்னும் சில ரசிகர்களுக்கு ஆக்ஷன் காட்சிகள் பிடித்திருக்கும். ஆக மொத்தம், ஏதோ ஒரு வகையில் இந்த படத்தை பார்க்க வரும் ரசிகர்களை நான் திருப்திப் படுத்தியிருக்கிறேன். அந்த திருப்திதான் எனக்கு வேண்டும் என்று அட்லீ மேலும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, பொழுதுபோக்கிற்காக படத்தை பார்த்தோம் என்றில்லாமல், என்னுடைய படத்தை பார்த்து, வீட்டுக்கு செல்லும்போது ஏதோ ஒன்றை கற்றுக் கொண்டோம் என்ற ஒரு பொறுப்புணர்வு கிடைக்க வேண்டும்,
இதுதான் என் இயக்கத்திற்கான பாலிசி என்றும் தெரிவித்துள்ளார். இவ்வாறு, இத்தனை விஷயங்களையும் ஒரு படத்தில் பூர்த்தி செய்ய வேண்டுமென்றால், ஒரு கதையை வைத்துக்கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியாது. பல வகையான கதைகள், கதைக்களங்கள் எனக்கு தேவைப்படுகிறது” என்று நைஸாக பேசி விமர்சகர்களுக்கு பதிலளித்துள்ளார். என்ன இருந்தாலும், படங்களை காப்பியடிப்பதை ஒப்புகொள்வதற்கும் ஒரு மன தைரியம் வேண்டும் தானே..