நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியா மணி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 7ம் தேதி சர்வதேச அளவில் வெளியான படம் ஜவான். முன்னதாக கடந்த ஜனவரியில் வெளியான ஷாருக்கானின் பதான் படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 1000 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டி மாஸ் காட்டியது.
இந்தப் படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரஹாம் உள்ளிட்டவர்களும் இணைந்திருந்தனர். நான்கு ஆண்டுகள் காத்திருப்பிற்கு பின்னர், ஷாருக்கின் இந்தப் படம் வெளியான நிலையில், படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். நான்கு ஆண்டுகள் ரசிகர்களை காத்திருக்க செய்ததாலோ என்னவோ, அடுத்தடுத்தப் படங்களை ஒரே ஆண்டில் வெளியிட்டுள்ளார் ஷாருக்கான்,
அவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜவான் படம் கடந்த 7ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியானது. இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டில் இயக்குநராக தன்னுடைய என்ட்ரியை சிறப்பாக அமைத்துள்ளார் இயக்குநர் அட்லீ. அவர் பல படங்களில் இருந்து காட்சிகளை உருவியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தபோதிலும், திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
முதல் நாளில் 120 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த ஜவான், தொடர்ந்து 5 நாட்களும் 100 கோடிக்கும் அதிகமாக கலெக்ஷன் செய்தது. இதன் காரணமாக முதல் வார இறுதிக்குள்ளாகவே 600 கோடி ரூபாய் வரை வசூலித்துவிட்டது ஜவான். ஆனால், அதன் பின்னர் பெரியளவில் கலெக்ஷ இல்லை எனத் தெரிகிறது. இரண்டாவது வாரம் இதுவரை 200 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. ஆகமொத்தம் 10 நாட்களில் 800 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளதாம்.
தமிழ்நாட்டில் மட்டும் ஜவான் வசூல், 60 முதல் 70 கோடி ரூபாய் வரை என சொல்லப்படுகிறது. இதனால் அட்லீயின் அடுத்தப் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதனிடையே கோலிவுட் இயக்குநர்களில் 800 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்த இரண்டாவது நபராக அட்லீ சாதனை படைத்துள்ளார். முன்னதாக அவரது குரு இயக்குநர் ஷங்கர், 2.O படத்தின் மூலம் 800 கோடி வசூல் செய்தார்.
இப்போது அந்த சாதனையை பாலிவுட் சென்று ஜவான் படம் மூலம் பிரேக் செய்துள்ளார் அட்லீ. மேலும் இனி வரும் நாட்களில் கண்டிப்பாக ஜவான் படம் ரூ. 1000 கோடியை கடந்த விடும் என்கின்றனர்.சமீபத்தில் ஜவான் படத்தின் வெற்றி விழா மும்பையில் நடைபெற்றது. இதனை அடுத்து நேர்காணல் ஒன்றில் இயக்குநர் அட்லி ‘ஜவான்’ படத்தை ஆஸ்கருக்கு அனுப்புவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளது நிஜமாகவே ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அந்த நேர்காணலில் அட்லி, “எல்லா விஷயங்களும் சரியாக அமைந்தால் ‘ஜவான்’ நிச்சயம் ஆஸ்கருக்கு செல்லும். சினிமாவில் வேலைப் பார்க்கும் அனைவருக்கும் கோல்டன் குளோப்ஸ், ஆஸ்கர், தேசிய விருதுகள் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுபோல தான் எனக்கும்! ’ஜவான்’ படம் ஆஸ்கர் விருது வாங்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. இதுகுறித்து ஷாருக்கான் சாருடன் பேச போகிறேன்” என அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். அட்லியின் இந்த பேச்சுக்கு ரசிகர்கள் பலரும், ‘ஆஸ்கர் அந்த அளவுக்கு தரம் குறையவில்லை’ என்றும், ‘இந்த காப்பி பேஸ்ட்டுக்கு ஆஸ்கர் கேக்குதா, மனசாட்சியே இல்லையா அட்லி’ எனவும் கூறி வருகின்றனர்.