உங்க சாதிக்காரர் பணத்தில் தான் படம் எடுப்பேன் என்று சொல்வீர்களா.? பேரரசு ஆவேசம்…

0
Follow on Google News

சமீபத்தில் வெளியான மாரிசெல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் அந்த படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ், தேவர் மகன் படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பின்பு, சாதி சார்ந்த விமர்சனம் விவாதமாக மாறியுள்ளது, இந்நிலையில் இயக்குனர் பேரரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து பேசுகையில், சினிமா என்பது ஒரு கலைஞர்களின் இனம், இங்கே ஜாதி மதம் ஏதும் கிடையாது.

இங்கே தாழ்த்தப்பட்டவன், உயர்த்தப்பட்டவன் என்று எவனும் கிடையாது. சினிமாவில் வெற்றி பெற்றவன், வெற்றி அடையப் போகின்றவன் என்ற இரண்டு ஜாதி மட்டும் தான் இருக்கின்றது. உலகமே போற்றிய மிகப் பெரிய இசையமைப்பாளர் இளையராஜா இவர்கள் சொல்ல கூடிய ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர், ஆனால் அவரை ஞானி என்றோம், ராகதேவன் தேவன் என்றோம், எத்தனை பட்டங்கள் அவருக்கு.

அவர் பாடலைக் கேட்டு ரசிக்காத எந்த ஒரு தமிழனும் இருக்க முடியாது. அவரை யாரும் ஒரு ஜாதி வட்டத்திற்குள் அடைக்கவில்லை. சிலர் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்று பேசுகிறார்கள். அப்படி சொல்லப்பட்ட உயர்ந்த ஜாதி இயக்குனர்கள், உயர்ந்த ஜாதியில் உள்ள தயாரிப்பாளர்கள் இளையராஜா காலில் எத்தனை பேர் விழுந்தார்கள், அங்கே யார் ஜாதி பார்த்தது.?

அப்படியானால் இளையராஜாவை ஒரு இசை மேதையாக தான் அனைவரும் பார்த்தோம், இளையராஜா நடந்து செல்வார், எத்தனையோ நபர்கள் பாதம் தொட்டு கும்பிட்டார்கள். எவன் ஜாதி பார்த்தான், சினிமாவில் எவன் தன்னுடைய திறமையால் எவன் வெற்றி பெறுகிறானோ.? அவர் காலில் அனைவருமே விழுந்து ஆசி வாங்குவான் அதுதான் சினிமா, எந்த ஒரு இயக்குனர் தன்னிடம் வாய்ப்பு கேட்டு வருகின்ற உதவி இயக்குனரிடம், எந்த ஜாதி என்று கேட்கிறானோ.? அவன் மனித ஜாதியே இல்லை என ஆவேசப்பட்ட இயக்குனர் பேரரசு.

எனக்கு சினிமாவில் வாழ்க்கை கொடுத்தவர் தளபதி விஜய், அவர் என்னிடம் கதை தான் கேட்டார், நீ எந்த ஜாதி எந்த மதம் என்று கேட்கவில்லை. நான் சவால் விடுகிறேன் முதல் படம் நீங்கள் பண்ணும் போது என்னுடைய ஜாதிக்காரன் தான் தயாரிப்பாளரா இருக்கணும், என் சாதிக்காரருக்கு தான் படம் பண்ணுவேன் என நீங்கள் படம் செய்தீர்களா.?

அப்படியானால் முதல் படத்திற்கு ஏதோ ஒரு சாதிக்காரர் தயாரிப்பாளராக வரலாம், அவருடைய பணத்தில் படம் பண்ணலாம், வெற்றி பெற்ற பின்பு சாதி பார்க்கலாமா.? நம்முடைய ஜாதிக்கு நாம் பயன்பட வேண்டுமே தவிர, நம்முடைய ஜாதியை நமக்காக பயன்படுத்தக் கூடாது, நம்முடைய வெற்றிக்காகவும் நம்முடைய பணத்திற்காகவும், நம்முடைய புகழுக்காகவும் நம்மளுடைய ஜாதியை பயன்படுத்த க் கூடாது என பேசிய இயக்குனர் பேரரசு.

மேலும், ஜாதிக்காக நீங்க வாழ்கிறீர்கள், என்றால் எத்தனையோ ஜாதி அமைப்புகள் இருக்கு, அங்கே சென்று ஒரு பொறுப்பை வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் சினிமாவில் ஜாதியை கலக்க வேண்டாம் என எச்சரித்த இயக்குனர் பேரரசு. ஜாதி படம் எடுப்பது தவறில்லை, ஜாதியை பெருமை பேசுவது தவறில்லை, ஆனால் இன்னொரு ஜாதியை சிறுமைப்படுத்துவதற்கு இங்கே யாருக்கும் உரிமை இல்லை.

சாதி படம் எடுப்பதை வரவேற்கிறேன், ஏனென்றால் ஜாதிப் படம் வரும்போது அந்த ஜாதியில் உள்ள பண்பாடு கலாச்சாரம் அனைத்தும் பதியப்படும், சாதி படம் எடுக்கிறீர்களா.? உங்கள் வலியை சொல்கிறீர்களா.? அந்த வலியை மக்கள் உணரும்படி இருக்க வேண்டும், ஆனால் அந்த வலியை மற்றவர்களுக்கு வலியை ஏற்படுத்தும் படி எடுக்க வேண்டாம் என சாதிய இயக்குனர்களுக்கு சவுக்கடி கொடுப்பது போன்று பேசியுள்ளார் இயக்குனர் பேரரசு.