தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் A.R. முருகதாசும் ஒருவர். இவர் பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்களை இயக்கி அதிரடி காட்டி வரும் இயக்குனர் முருகதாஸ், முதன்முதலில் 2001 இல் அஜித்தை வைத்து இயக்கிய ‘தீனா’ படம் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
அஜித் மட்டுமின்றி, நடிகர் ரஜினி காந்த், விஜய காந்த், விஜய், சூர்யா மற்றும் தெலுங்கில் மகேஷ் பாபு என பல முன்னணி நடிகர்களும் இவரது இயக்கத்தில் நடித்துள்ளனர்.2௦௦2 இல் வெளியான ‘ரமணா’ படம் முதல் 2018 இல் வெளியான ‘சர்க்கார்’ படம் வரை இவரது இயக்கத்தில் வெளிவரும் படங்கள் அனைத்தும் அரசியல் மற்றும் சமூக அக்கறைக் கொண்டவையாக இருக்கும்.
இவ்வாறு தனது படங்களில் எப்போதும் சமூக அக்கறைக் கொண்ட கருத்துகளை எடுத்துக் கூறும் இயக்குனர் முருகதாஸ், தொலைக்காட்சிப் பேட்டி, மேடைப் பேச்சு என பொதுஇடங்களில் பேசும்போது, தனது வேலை மற்றும் படம் தொடர்பான விஷயங்களை மட்டுமே பகிர்ந்து கொள்வார். மற்ற பிரபலங்களைப் போல, தனது வாழக்கையின் தனிப்பட்ட விஷயங்களையோ குடும்பப் பின்னணி பற்றியோ நீட்டி முழக்கி பேசியதில்லை.
இந்நிலையில் தான், அண்ணா பல்கலைக்கழக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக சென்றிருக்கிறார். அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றும் போது, தனது திரையுலக பயணத்தின் தொடக்கத்தில் தான் அனுபவித்த இடர்பாடுகள் மற்றும் அவமானங்களை பற்றி மனம் திறந்திருக்கிறார். அவ்வாறு தனது திரையுலக வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டத்தில் எதிர்கொண்ட இன்னல்கள் பற்றி முருகதாஸ் பேசிக் கொண்டிருக்கும்போது, பின்வரும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு பற்றியும் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது; “நான் சினிமாவில் நான் உதவியாளராக பணியாற்றியபோது, பலருக்கும் சாப்பாடு கொடுத்து அவர்களின் தட்டையும் கழுவி வைத்திருக்கிறேன். எவ்வுளவு கீழ் இருந்து முன்னேறி இருக்கிறேன் என்பதற்கு அதுவே சாட்சி. அதனை சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன்” என்று நெகிழ்ந்துள்ளார்.
தற்போது, திரைத் துறையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் AR முருகதாஸ் இவ்வாறு தனது ஆரம்பகால கஷ்டங்களை வெளிப்படையாக கூறியிருப்பது, சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், அவரது விடாமுயற்சியினால், இப்போது பிரபல இயக்குனராக உயர்ந்திருப்பது பற்றியும் ஏராளமான ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.