லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அக்டோபர் 19ம் தேதி லியோ திரைப்படம் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டு தேதி நெருங்க.. நெருங்க இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது இப்படத்தில் நடித்துள்ள மிஷ்கின் ஒரு கருத்து ஒன்றினைக் கூறி மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.
தமிழில் திரையுலகில் தனித்துவமான மேக்கிங் மூலம் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் மிஷ்கின் 2006-ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தொடர்ந்து அஞ்சாதே, யுத்தம் செய், நந்தலாலா, பிசாசு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சைக்கோ போன்ற தரமான படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக இருந்து வருகின்றார்.
தற்போது இவர் நடிகர் விஜய் சேதுபதி இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் படத்தின் முதற்கட்ட பணிகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறார். இதற்கிடையில் நடிகராகவும் அசத்தி வரும் மிஷ்கின் மாவீரன் படத்தை தொடர்ந்து அடுத்து விஜய் நடிப்பில் மிக பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ள லியோ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். எப்போதும் வெளிப்படையாக பேசிவரும் இயக்குனர் மிஷ்கின் அவ்வப்போது, இது போன்ற தன்னுடைய கருத்துக்களால் சர்ச்சைகளில் சிக்கி இருக்கின்றார்.
பொதுவாகவே இயக்குனர் மிஷ்கின், ஒருமையில் பேசும் பழக்கம் கொண்டவர், ஆனால் இது அவர், மற்றவர்கள் மீது கொண்ட அதீத அன்பினாலும் அல்லது அதீத கோவத்தினாலும் அவர் பேசுகின்ற வார்த்தைகள் என்பது அவருடைய ரசிகர்களுக்கும் நன்கு அறிந்ததே. ஏன் தமிழக மக்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் இது புதிய விஷயமும் கிடையாது. இந்நிலையில் லியோ திரைப்படத்தில் அவர் நடித்திருப்பதால் அவர் செல்லும் இடமெங்கும் லியோ திரைப்படத்திற்கான அப்டேட் குறித்து அவரிடம் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பல பிரபலங்கள் லியோ திரைப்படத்தை பார்த்து முடித்துள்ள நிலையில், அதே கேள்வி மிஷ்கின் அவர்களிடமும் முன் வைக்கப்பட்டது. இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் அளித்த பேட்டியில், “லியோ படம் நன்றாக வந்துள்ளது. தம்பி விஜய்யும் படத்தை பார்த்துள்ளான். பார்த்து விட்டு நன்றாக உள்ளது என்று பாராட்டியுள்ளான். படம் மிகப்பெரிய வெற்றி பெறும்” என்று கூறியிருந்தார். விஜய்யை ஒருமையில் பேசியதற்கு அவரது ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
அதுமட்டுமின்றி கடுப்பான விஜய்யின் ரசிகர்கள் இயக்குனர் மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பரபரப்பை கிளப்பியிருக்கிறார்கள். 15.9.2023 அன்று நடிகர் திரு. மிஷ்கின் அவர்கள் அகால மரணம் அடைந்தார் என்று சில போஸ்டர்களை நம்மால் பார்க்கமுடிகிறது. மேலும் தளபதியை இன்னும் அவன், இவன் என்று பேசுவதா? அப்படி சொல்லி கூப்பிடும் லெவலில் அவர் இல்லை.
தளபதி அந்த நிலையையெல்லாம் தாண்டி பல வருஷம் ஆகிவிட்டது. பொது இடத்தில் பேசும்போது பார்த்து பேசுங்கள். தளபதி வருங்கால முதல்-அமைச்சர். அதனால் பொது இடத்தில் மரியதை கொடுத்து பேசுங்கள் என்றும் விஜய் ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது அவர் விஜய்யிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும் என கூறி வருகின்றனர்.