அரைச்ச மாவை அரைச்ச மாரிசெல்வராஜ்… மாமன்னன் திரைப்படத்தின் திரை விமர்சனம்…

0
Follow on Google News

மாரி செல்வராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வலியை சொல்லும் படமாக அமைந்திருந்தது. அதே எதிர்பார்ப்புடன் தான் தற்பொழுது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ள மாமன்னன் படத்தை பார்ப்பதற்கு சினிமா ரசிகர்கள் காத்திருந்தன. ஆனால் மாமன்னன் படத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை மாரிசெல்வராஜ் சொன்னாலும் கூட, இதற்கு முன்பு வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்கள் மாதிரி மாமன்னன் படம் இல்லை.

இது மாரி செல்வராஜ் இயக்கும் படங்களில் அவருக்கான ஒரு ஸ்டைல் இருக்கும், ஆனால் மாமன்னன் படம அரசியல் கமர்சியல் என பல கலவைகள் கலந்து இது மாரிசெல்வராஜுக்கான படமே இல்லை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. அரசியல், கட்சி, தேர்தல் என ஒரு கமர்சியல் தளத்திற்கு மாமன்னன் படத்தை நகர்த்தியுள்ளார் மாரி செல்வராஜ்.

பொதுவாக இயக்குனர் பா ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை வெளிப்படையாக தங்கள் படத்தின் மூலம் காட்சிகளாக வெளிப்படுத்துவார்கள். ஆனால் மாரி செல்வராஜ் போகிற போக்கில் அவர் சொல்லும் விதமே மிக சிறப்பாக இருக்கும். அந்த வகையில் தான் இதற்கு முன்பு வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களில் காட்சிகள் அமைந்திருந்தது.

ஆனால் மாமன்னன் திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை மாரிசெல்வராஜ் எடுத்து தெரிவித்திருந்தாலும் கூட, இதற்கு முன்பு வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களில் சொன்ன அற்புதம் இந்த திரைப்படத்தில் இல்லை என்று சொல்லலாம், ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வரும் ஒருவன் ஒரு உயர்ந்த இடத்திற்கு வருவதற்கு பல முயற்சிகள் செய்தும், அவனுக்கு பல தடைகள் ஏற்படுகிறது.

அப்படி பல தடைகளை தாண்டியும் ஒரு கடுமையான போராட்டத்திற்கு முன்பு ஒரு மிகப்பெரிய உயர்ந்த சபையில் அந்த ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த நபர் அமரும் போது. அவரை பார்த்து பலரும் தலை வணங்கும் சூழல் ஏற்படுகிறது. இதுதான் மாமன்னனின் கதை கருவாக அமைந்துள்ளது. அதாவது இதற்கு முன்பு ஜெயலலிதா உயிருடன் இருக்கும் பொழுது, அதிமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த பட்டியல் சமூகத்தைச் சார்ந்த தனபால் அவர்களின் கதை என்கின்ற விமர்சனமும் படத்தை பார்த்த வர்கள் கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மாமன்னன் படத்தில் ஒரு தூணாக திகழ்கின்றவர் அந்த படத்தில் நடித்த பகத் பாஸில், மாமன்னன் படத்தில் மாமன்னனாக வடிவேலுக்கு பதில் பகத் பாசில் நடித்திருந்தால் இந்த படம் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும் என்கின்ற அளவுக்கு பஹத் பாசில் நடிப்பு இந்த படத்தில் அமைத்துள்ளது. இந்திய சினிமாவில் கண்களிலே நடிக்க கூடியவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் மட்டும்தான். அந்த வரிசையில் பகத் பாஸில் மிக அருமையாக கண்களிலே நடித்துள்ளார்.

மாமன்னன் படத்தில் நடிகர் பகத் பாசில் தான் படம் முழுக்க தன்னுடைய நடிப்பால் வடிவேலு, உதயநிதி ஆகிய இருவரையுமே ஓரங்கட்டி விட்டார் என்று சொல்லும் அளவிற்கு இந்த படத்தில் பகத் பாஸில் நடிப்பால் மிரட்டியுள்ளார். பகத் பாஸில் என்ட்ரி கொடுக்கும் முதல் காட்சியில் அவரை ஒரு கொடூரமான வில்லனாக படம் பார்ப்பவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

மொத்தத்தில் மாமன்னன் முதல் பாதி மாரிசெல்வராஜ் படமாக நகர்கிறது, ஆனால் இரண்டாம் பாதியில் வழக்கமான தமிழ் சினிமாக்களில் நடைபெறும் தேர்தல் அரசியல், வாக்கு எண்ணிக்கை, தொலைக்காட்சி விவாதம் என பார்த்து பார்த்து புளித்துப் போன கதையாக தான் அமைந்துள்ளது, மேலும் இரண்டாம் பாகத்தில் அடுத்தடுத்து என்ன காட்சிகள் வரும் என படம் பார்ப்போருக்கு முன்கூட்டியே தெரியும் வகையில் கதை நகர்கிறது.