இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரி அள்ளி குவித்த படம் பொன்னியின் செல்வன். இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள நிலையில், முதல் பாகம் தற்போது வெளியாகி வெற்றியடைந்துள்ளது. இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்தை முடித்துவிட்டு மணிரத்தினம் இயக்கும் அடுத்த புதிய படத்தில் ரஜினி நடிப்பதற்கு மிகுந்த ஆர்வமுடன் இருந்துள்ளார். முதலில் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் இதுகுறித்து மணிரத்தினம் மனைவி சுஹாசினிடம் பேசி உள்ளார். அதன் பின்பு ரஜினிகாந்த் மற்றும் மணிரத்தினம் இருவரும் அடுத்த புதிய படம் குறித்து ஆலோசித்துள்ளனர். விரைவில் கதையை தயார் செய்கிறேன் என்று மணிரத்தினம் தெரிவித்துள்ளார்.
மணிரத்தினம் இயக்கும் புதிய படத்தில் நாம் கமிட்டாக போகிறோம் என்பதை மனதில் வைத்து பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, மற்றும் சில நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் படம் குறித்தும் அந்த படத்தின் இயக்குனர் மணிரத்தினத்தையும் புகழ்ந்து பேசி வந்தார்.
மணிரத்தினம் இயக்கத்தில் அடுத்து ரஜினிகாந்த் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்கின்ற தகவல் வெளியான நிலையில், திடீரென ரெட் ஜெயின் தயாரிப்பில், மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு அதிரடியாக வெளியானது. ரஜினிகாந்தை வைத்து தான் மணிரத்தினம் படம் இயக்குவதாக இருந்த நிலையில் கடைசி கட்டத்தில் நடந்த இந்த மாற்றத்தின் பின்னணி குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
ரெட் ஜெயன்ட், கமல்ஹாசன், மணிரத்தினம் ஆகியோரின் கூட்டணி என்பது அறிவிப்பிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் உறுதி செய்யப்பட்டுள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தன்னுடைய விருப்பத்தை தெரிவித்த பின்பு, மணிரத்தினம் பிரம்மாண்டமான ஒரு கதையை தயார் செய்து, அதில் ரஜினி மற்றும் கமல் இருவரும் நடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார்.
இதில் கமல் நடிக்க சம்மதம் தெரிவித்தாலும் கூட ரஜினிகாந்த் தன்னுடைய தனித்துவத்தை விட்டுக் கொடுக்க முன்வரவில்லை. தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் உடன் நல்ல நட்புடன் ரஜினிகாந்த் இருந்தாலும், தொழில் ரீதியாக கமல்ஹாசனை தன்னுடைய போட்டியாளராக தான் ரஜினிகாந்த் தற்போது வரை கருதுகிறார். அந்த வகையில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த் படப்பிடிப்பின் போது நெல்சனிடம், இந்த படம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் வசூலை முறியடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்கும் படம் ரஜினி படமா.? கமல் படமா.? என்கின்ற ஒரு விவாதம் வந்தால் அது தன்னுடைய தனித்துவத்திற்கு ஒரு இழுக்கு என்பதை உணர்ந்த ரஜினிகாந்த். இயக்குனர் மணிரத்தினத்திடம் கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க முடியாது என நாசுக்காக தெரிவித்து விட்டார்.
மேலும் தனக்கான சோலோ ஹீரோவாக ஒரு கதையை தயார் செய்யுங்கள் நடிக்கலாம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதன் பின்பு தான் கமல்ஹாசன், மணிரத்தினம் மற்றும் ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் தயாரிப்பில் புதிய படம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு மல்டி ஸ்டார் படம் எனக் கூறப்படுவதால் மேலும் பல நடிகர்கள் இந்த படத்தில் இடம் பெறுவார்கள் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.