சமீபத்தில் நடந்த மாமன்னன் ஆடியோ வெளியிட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த கமல்ஹாசன் முன்பே அவர் நடிப்பில் வெளியான தேவர் மகன் படம் குறித்து மாமன்னன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்து, இன்று மிக பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் கமல்ஹாசனை மிக கடுமையாக விமர்சனம் செய்து கமல்ஹாசனுக்கு மாரி செல்வராஜ் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்ட சிலவற்றில்,
மூன்று மணி நேரம் நீங்கள் மீசை முறுக்கி அரிவாள் தூக்கி கொலைகளையும் செய்து கடைசி மூன்று நிமிடத்தில் “டேய் அரிவாள்களை கீழ போடுங்கடா” என்று சொன்னது நீங்கள் விரும்பியதை போலவே யாருடைய காதிலும் விழவில்லை. போலும் இத்தனைக்கும் பிறகும் எதிர்வினை புரியாமல் இருக்க நாங்கள் என்ன எருமை மாடுகளா. கை, கால், உயிர், உடைமை இழக்கத்தான் செய்தோம்.
ஆனால் நீங்களே எதிபார்க்காத ஒரு எழுச்சியை யாம் பெற்றோம். இத்தனைக்கும் பிறகும் உங்கள் சினிமா வாழ்க்கைக்கு பல உதடுகள் உச்சரிக்ககூடிய வெற்றி தேவைபட்டபோது மறுபடியும் மனசு கூசாமல் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்களின் அதே போர்களத்தை தான். ”சண்டியர்” யார் இந்த சண்டியர் நீங்களா ஐயோ! நீங்கள் பரமக்குடி சாஸ்த்திரிகள் ஆச்சே, ஐரோப்பிய அறிவை பெற்ற ஒரே தமிழ் சீர்திருத்த சிந்தனையாளர் ஆச்சே!
அப்படியெனில் யார் அந்த சண்டியர் மறுபடியும் அதே ஒரு பிரிவு மக்கள் ஆனால் இப்போது கருப்பு சட்டை முறுக்கு பட்டை, கறுக்கு அரிவாள் சகிதம் வந்து இது தென் தமிழகத்தில் சாதி கலரவத்தை தூண்டிய “ தேவர்மகனின் இரண்டாவது பாகம்“ என்ற அருவருப்பான அறிவிப்பு வேறு. சண்டியர் என்ற தலைப்பை தயவுசெய்து மாற்றிகொள்ளுங்கள்” என்று ஒரு பாதிக்கபட்ட ஒரு சமுக மக்களின் சார்பாக அதன் பிரதிநிதி சொன்னதற்கு எவ்வளவு ஆரிய அதிகாரத்தோடு உங்கள் பதிலை சொன்னீர்கள்.
சண்டியர்னு பேர் வைத்தா கிருஸ்ணசாமி கோவித்துகொள்வார் என்று அதனால கிட்டிவாசல்னு பேரு வைக்கலாமென்றால் அதுக்கும் கோபித்துக்கொண்டால் என்ன பண்ணுவது. எவ்வளவு அருவருப்பான ஆணவமான நாகரிகம் இல்லாத பதில். நீங்கள் மன்மதலீலை என்று பெயர் வைத்தற்கா அவர் எதிர்த்தார். நீங்கள் தேவர்மகன் என்று பெயர் வைத்தபோதுகூட யாரும் எதிர்க்கவில்லையே..
ஆனால் அதன் மூலம் வந்த விளைவும் ஏற்பட்ட வலியையும் பார்த்து பயந்து பெயரை மாற்றிகொள்ளுங்கள் என்று ஒரு ஒடுக்கபட்ட சமூக மக்களுக்காய் கேட்டதற்காய் இவ்வளவு கொச்சையான பதில். சமூக அக்கறை இல்லாதவன் எப்படி கலைஞன் ஆக முடியும். இந்த முற்போக்கு குசும்பும் ஆணவமும் இன்று வந்ததில்லை உங்களுக்கு உங்கள் தாத்தன் முப்பாட்டன் காலத்து ஆரிய குசும்பு என்று எங்களுக்கு தெரியும்.
எப்படி ஒரு சினிமாவின் பெயரை மாற்ற சொன்னதால் நாங்கள் கலாச்சார காவலர்களா. மனிதனை கழுவ மரத்தில் ஏற்றி கொன்ற சமண கலாச்சாரம் எங்களுடையதா! யாருக்கு வேண்டும் உங்கள் கலாச்சாரம்.
உங்களுக்குதான் வேண்டும் எங்கள் கலாச்சாரம் நாங்கள் அடிமையாய் இருந்த கலாச்சாரமும் நாங்கள் அரிவாள் தூக்கிய கலாச்சாரமும் உங்களுக்குத்தான் வேண்டும்.
அப்பொதுதானே அதில் உங்களை போல ஆரிய நாட்டாமைகள் குளிர் காய முடியும். அப்புறம் என்ன சொன்னீர்கள்……ஐந்து வருடத்திற்குள் மாறிப்போகும் அரசியல்வாதிகளை போல எல்லாமே மாறி போய்விடுமா திரு .கமல் அவர்களே… எதுவும் எங்கும் மாறவில்லை. உங்களை போன்றவர்கள் இருக்கும்வரை எதுவும் மாற போவதுமில்லை யாரும் எதையும் மறக்க போவதுமில்லை. என சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசனுக்கு மாரி செல்வராஜ் எழுதிய கடிதம் தற்பொழுது பேசும் பொருளாக மாறியுள்ளது குறிப்பிடதக்கது.