இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, லியோ படத்தின் ‘bloody sweet’ சாங் யூட்யூபில் வெளியாகி ரசிகர்களிடையே ஆர்வத்தை அதிகரித்த நிலையில், அடுத்தடுத்து படத்தின் பர்ஸ்ட் லுக், ‘நான் ரெடி’ பாடல், ஆண்டனி தாஸ் மற்றும் ஹரோல்ட் தாஸ் ஆகியோரின் கிளிம்ப்ஸ் மற்றும் ‘badass’ பாடல் என வரிசையாக வெளியிட்டு படக்குழ்வினர் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடக்கும் என்று எதிர்பார்த்த விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரசிகர்களின் பாதுகாப்பு கருதி ஆடியோ லாஞ்ச் நடத்தப்போவதில்லை என்று படக்குழுவே அறிவித்திருந்தது. இதனால் சோகமடைந்த ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காகவே லியோ படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டனர்.
படத்தின் டிரெய்லர் யூட்யூபில் வெளியான மூன்று நாட்களிலேயே 43 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து விட்டது. மேலும், டிரெய்லர் அதிரடியாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். லியோ படத்தின் ட்ரெய்லரில் வித்தியாசமான வேடத்தில் இருக்கும் சாண்டி மாஸ்டர், அதிரடி ஆக்சன் காட்சிகளில் மாஸான விஜய், ஆக்ரோஷமான ஹைனா என ட்ரெய்லர் முழுவதும் விறுவிறுப்பான சீன்கள் இடம் பெற்றிருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
மற்றொரு பக்கம் லியோ ட்ரெய்லரில் நடிகர் விஜய் கெட்ட வார்த்தையில் பேசும் காட்சிக்கு மகளிர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உச்ச நடிகராகவும், பெண்கள் குழந்தைகளுக்கு முக்கியத்தும் கொடுப்பவராகவும் உள்ள விஜய் இந்த வார்த்தையை பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது என்று பலரும் கொந்தளித்து வருகின்றனர். மேலும், கெட்ட வார்த்தையில் பீப் போடுமாறு மகளிர் குழுவினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
ஆனால், லியோ படக்குழுவினர் எதற்கும் செவி மடுக்காமல் இருந்து வருகின்றனர். இப்படியான நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றில் நடத்தப்பட்ட ரசிகர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவரிடம் விஜய் பேசிய வசனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இயக்குனர் லோகேஷ் பதில் அளித்தார்.
அதாவது, நடிகர் விஜய் அந்த வார்த்தையை பேசுவதற்கு தயங்கினார் என்றும், தான்தான் விஜய்யை கட்டாயப்படுத்தி பேச வைத்ததாகவும் இயக்குனர் லோகேஷ் வெளிப்படையாகக் கூறினார். எனவே, அந்த சீனுக்கு முழுக் காரணம் நான்தானே தவிர இதற்கு நடிகர் விஜய் பொறுப்பாக மாட்டார் என்று லோகேஷ் கனகராஜ் தைரியமாக பழியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
அத்துடன் படத்தில் விஜய் அந்த வார்த்தையை பேசுவதற்கு அவசியம் இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். முழுக்க முழுக்க லோகேஷ் படமாக உருவாகியுள்ள லியோ படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வியாழன் அன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், லியோ படத்திற்கு அடுத்தடுத்த பலப் பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே, லியோ படத்தின் ட்ரெய்லர் கொண்டாட்டத்தின்போது ரோகினி திரையரங்குகளில் இருக்கைகள் விஜய் ரசிகர்களால் நாசம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.