சினிமாவில் தனக்கென இடத்தைப் பிடிப்பது எவ்வளவு கஷ்டமோ, அதேபோல் பிடித்த இடத்தை தக்கவைத்துக் கொள்வது என்பதும் மிகவும் கடினமானது. அவமானங்கள், விமர்சனங்கள், துரோகம் என பல்வேறு இன்னல்கள் துரத்தி வந்தாலும், அத்தனையையும் துடைத்தெறிந்து விட்டு இலக்கை நோக்கி ஓடினால் மட்டுமே சினிமாவில் முன்னேற முடியும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது.
அப்படித்தான், சமீப காலமாகவே, அமீர்-ஞானவேல் பிரச்சினை நீண்ட நாட்களாக முடிவுக்கு வராமல் உள்ளது. பருத்திவீரன் படத்தில் ஆரம்பித்த பிரச்சினை தற்போது வரை தொடர்ந்து பல சர்ச்சைகளை சந்தித்தவண்ணம் உள்ளது. முதலில் பருத்திவீரன் படத்தை தயாரிப்பதற்கு ஒப்புக்கொண்ட ஞானவேல்ராஜா, பாதியிலேயே படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும், அதன் பின், அமீர்தான் பல இடங்களில் கடன் வாங்கி அப்படத்தை முடித்ததாகவும் அமீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
இதற்கு ஞானவேல் ராஜா அமீரை அவமானப்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இதனால் இந்தப் பிரச்சினை இணையத்தில் பூதாகரமாக வெடித்தது. உடனடியாக, சமுத்திரக்கனி மற்றும் நடிகர் சசிகுமார் ஆகியோர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். மேலும், ஞானவேல் ராஜா படத்திலிருந்து விலகியபின் சமுத்திரகனிதான் சசிகுமார் போன்ற தனக்கு பழக்கமாவர்களிடமிருந்து கடன் வாங்கி அமீருக்கு கொடுத்ததாக சமுத்திரக்கனி தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமின்றி, இயக்குனர் அமீர் கஷ்டப்பட்டு கடன் வாங்கி எடுத்து முடித்த படத்தை, அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதியின் பெயரை தவறாக உபயோகித்து ஞானவேல்ராஜா தரப்பு எழுதி வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு தொடர்ச்சியாக பருத்திவீரன் பிரச்சினை குறித்து ஞானவேல் ராஜாவுக்கு எதிரான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தாலும், அப்படத்தில் நடித்த கார்த்தியோ, அவரது தந்தை சிவக்குமாரோ அவர்களது கருத்தை வெளியிடாமல் அமைதி காத்து வருகின்றனர்.
ஆனால் இந்த மொத்த பிரச்சினைகளுக்கும் பின் சிவகுமார் தான் காரணம் என பத்திரிக்கையாளர் சுபைர் தெரிவித்துள்ளார். நாட்டில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா என குடும்பமே சமூக அக்கறையுடன் முன்வந்து குரல்கொடுக்கும். ஆனால், இப்போது, தன் மகனை தமிழ் சினிமாவில் மாபெரும் ஹிட் படம் மூலம் அறிமுகப்படுத்திய அமீர் மிகப்பெரிய சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கும் போது, சிவக்குமார் குடும்பத்தினர் கண்டுகொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் என்னவென்றால்,
ஞானவேல் ராஜா அவரது உறவினர் என்பதையும் தாண்டி, சிவக்குமார் தான் ஞானவேல் ராஜாவை தூண்டி விட்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார் சுபைர். மேலும், அப்போதைய முதல்வரான கருணாநிதி பெயரை சொல்லி அமீரை மிரட்டியது ஞானவேல் ராஜாவாக இருக்க வாய்ப்பில்லை என்றும், சிவக்குமாருக்கு தான் ஜெயலலிதா, கருணாந்தி போன்ற அரசியல் தலைவர்களுடன் பழக்கம் இருந்த்தது எனபதால், இந்த மொத்த பிரச்சினைகளுக்கும் பின் சிவகுமார்தான் இருப்பதாக பத்திரிக்கையாளர் சுபைர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அமீர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பருத்தி வீரன் படம் வெளியான பின்பு, அப்போதைய முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து நேரடியாகவே பருத்தி வீரன் பஞ்சாயத்தில் உங்கள் பெயரை பயன்படுத்தி தான் என்னிடம் அந்த படத்தை எழுதி வாங்கினார்கள் என அமீர் கேட்டதற்கு, இது குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என அப்போதைய முதல்வர் கருணாநிதி தன்னிடம் தெரிவித்ததாக அமீர் தெரிவித்ததை தொடர்ந்து, பருத்திவீரன் பஞ்சாயத்தில் கருணாநிதி அனுமதியில்லாமலே அவருடைய பெயரை தவறாக அமீருக்கு எதிராக பயன்படுத்தியுள்ளது அம்பலமாகியுள்ளது குறிப்பிடதக்கது.