இது தான் கேப்டன் மில்லர் கதை … படம் எப்படி இருக்கும்…இது உங்களுக்கான திரைவிமர்சனம்..

0
Follow on Google News

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படங்களில் அதிகமான ஆர்வத்தை ஏற்படுத்திய படம் என்றால் சிவகார்த்திகேயன் அயலான் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் தான். இந்த இரண்டு படத்தில் பொங்கல் வின்னர் யார் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருந்து வந்தது. இந்நிலையில் கேப்டன் மில்லர் டிரெய்லரில் பார்த்ததை போலவே படம் முழுக்க துப்பாக்கி சத்தங்கள் ஆங்கிலேயர்களை துளைத்து எடுக்கும் காட்சிகள் என அதிகம் இருந்தாலும், இந்த படமும் அடிமை எண்ணத்திற்கும் ஆதிக்க வர்க்கத்தினரை எதிர்த்தும் நடத்தப்படும் போராகவே உருவாகி உள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், விஜி சந்திரசேகர், சந்தீப் கிஷன், வினோத் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் இப்படமானது மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது.

மத்தளம் பாறை கிராமத்து மக்கள் தாங்கள் கட்டிய கோயிலுக்குள் செல்ல முடியாமல் மன்னர் ஆட்சியில் அடிமையாக இருக்கின்றனர். இதனைப் பார்த்து கொந்தளிக்கிறார் தனுஷ். மேலும் ஆங்கிலப் படையில் சேர்ந்தால் தான் மரியாதை கிடைக்கும் என்று நினைத்து அங்கு செல்கிறார். ஆனால் இந்திய மக்களோ ஆங்கிலேய படைகளால் சரவாரியாக சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இதனால் கதை நாயகன் தனுஷ் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறார்.

இதனைத் தொடர்ந்து வேலையை விட்டுவிட்டு தன்னுடைய சொந்த கிராமத்திற்கே வருகிறார். ஆனால் கிராம மக்களோ தனுஷை ஏற்றுக்கொள்ளவில்லை. அது மட்டும் இன்றி ஆங்கிலேயருடன் சேர்ந்ததினால் கிராமத்தை விட்டு விலக்கி வைக்கப்படுகிறார். இதனால் தனுஷ் காட்டிற்கு சென்று தனியாக வாழ்கிறார். அங்கு ஒரு புரட்சி கூட்டம் அவரை அரவணைக்கிறது. அவர்களுடன் இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டை செய்கிறார்.

இதனிடையே மன்னர் ஆட்சியில் பொக்கிஷமாக பாதுகாத்த கோயில் சிலை ஆங்கிலேய அரசால் அபகரிக்கப்படுகிறது. அதனை பொறுக்காத மன்னர் குடும்பத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த சிலையை தனுஷின் கூட்டம் திருட செல்கிறது. சென்ற இடத்தில் தனுஷ் எடுக்கும் சுயநல முடிவு ஒட்டுமொத்த கிராமத்தையும் பாதிக்கிறத. ஆங்கிலேயர் மற்றும் மன்னர் பகைக்கு நடுவே மத்தளம் பாறை மக்கள் பந்தாடப்படுகிறார்கள். இதனால் யாரால் வெறுத்து துரத்த பட்டாரோ அந்த மக்களை காக்க கேப்டன் மில்லர் ஆக தனுஷ் என்ன செய்கிறார் என்பதே இப்படத்தின் கதையாகும்.

இப்படம் ஹாலிவுட் படங்களில் இருக்கக்கூடிய போர் படங்களைப் போன்று தத்ரூபமாக உள்ளது. படம் முழுவதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து கொண்டே இருக்கின்றனர். படத்தின் பலமே எடிட்டிங் தான். இந்த மொத்த படத்தையும் தனுஷ் தாங்கி பிடிக்கிறார். அதுமட்டுமின்றி சிறிய கதாபாத்திரத்தில் நடித்த மற்ற அனைவரும் கூட அவர்களது கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்துள்ளனர். இப்படத்தின் முதல் பாகம் மட்டுமே தற்போது வெளியாகி உள்ளது. மேற்கொண்டு 4 பாகங்கள் வரும்.

கேப்டன் மில்லர்’ படத்தின் முக்கியமான தூண் அல்லது இன்னொரு ஹீரோ என்றே ஜிவி பிரகாஷை சொல்லலாம். அந்தவிற்கு படத்தின் வேகத்துக்கு ஏற்ப பின்னணி இசையில் தெறிக்க விட்டுள்ளார். ரிலீசுக்கு முன்பாகவே பல பேட்டியில் சொன்னதை போன்றே ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு வெறித்தனமான இசையை கொடுத்துள்ளார். படம் முழுவதும் வன்முறை தெரிகின்றது. படம் முழுவதும் ஒலிக்கும் துப்பாக்கி சப்தங்களும், குண்டு வெடிப்பகளும் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அதுவே சிலருக்கு இப்படத்தை திரையில் கொண்டாட காரணமாகவும் அமையலாம்.

இந்த படத்தின் மைனஸ் என்னவென்றால் முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாம் பாதியில் இல்லை. பல லாஜிக் கோளாறுகள் படம் முழுவதும் உள்ளது. பெண் அடிமைத்தனம், மேல் ஜாதி, கீழ் ஜாதி என்று பல கருத்துக்கள் பேசப்படுகின்றன. ஆனால் அவை எதுவும் மக்கள் மனதில் அழுத்தங்களை ஏற்படுத்தவில்லை. மற்றபடி பெரிய அளவில் குறைகள் கேப்டன் மில்லர் படத்தில் இல்லை. எனவே கண்டிப்பாக தனுஷ் பொங்கல் வின்னர் ஆக நிறைய வாய்ப்புகள் உள்ளது.