100 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமான நடிகை விசித்ரா குக்வித் கோமாளி ஷோ மூலம் நல்ல பிரபலமாகி தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பிக்பாஸ் 7வது சீசனில் நடிகை விசித்ரா முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார். அவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளியை தொடர்ந்து தற்போது பிக்பாஸிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறார். நேற்று 51வது எபிசோட்டில் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அவர்கள் வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய சம்பவத்தை பற்றி கூற வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அப்போது பேசிய விசித்ரா, ” 2001 ஆம் ஆண்டு தெலுங்கு முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த பட ஷூட்டிங் கேரளாவில் நடைபெற்றது. இதற்காக அங்குள்ள ஓட்டல் அறையில் தங்கி ஷூட்டிங்கில் பங்கேற்று வந்தேன். முதல்முறையாக அந்த ஹீரோவிடம் என்னை அறிமுகம் செய்ய சென்றபோது, அவர் பெயரை கூட கேட்காமல், நைட்டு ரூமுக்கு வந்திரு என சொன்னார். ஆனால் அந்த ஹீரோ அழைத்தும் ரூமுக்கு நான் செல்லவில்லை.
இதனால் இரவில் சில நபர்கள் என்னுடைய அறையை தட்டிக் கொண்டு ரகளை செய்திருந்தார்கள். இதனால் நான் மிகவும் பயந்தேன். எப்படியாவது ஷூட்டிங் முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லனும் என்று நினைத்தேன். ஒவ்வொரு நாளும் இதே மாதிரி பிரச்சனையை சகித்துக் கொண்டிருந்தேன். இதை கவனித்த என்னுடைய கணவர், என்னிடம் என்ன பிரச்சனை? ஏதாவது என்னால் உதவி செய்ய முடியுமா? என்று கேட்டார். அப்போது நான், இந்த ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு அறை வேண்டும்.
ஆனால், நான் இங்கு தான் தங்கி இருக்கிறேன் என்று யாருக்கும் தெரியக்கூடாது என்று சொன்னேன். அவர் என்னுடைய நிலைமையை புரிந்து கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறையில் தங்க வைத்தார். அது யாருக்குமே தெரியாது. என்னுடைய ரூமுக்கு எதிரில் தான் நான் தங்கி இருந்தேன். ஆனால், நான் அங்கு இல்லை. நான் இருக்கிறேன் என்று தெரிந்து கொண்டு கதவை தட்டிக் கொண்டு இருந்தார்கள். நான் ஒற்றுக் கொள்ளவில்லை என்பதால் எனக்கு தெரியாமல் என்னை அழிக்க படக்குழு பிளான் செய்கிறார்கள் என தெரியவில்லை.
ஒருநாள் காட்டுப்பகுதியில் ஷூட்டிங் நடைபெற்றபோது, பைட்டர்கள் மற்றும் ஜுனியர் ஆர்டிஸ்டுகளுடன் ஒரு கலவர காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது ஆக்ஷன் சொன்னதும் என்னை ஒருவர் தவறாக தொட்டதை உணர்ந்தேன். இதையடுத்து அந்த ஷாட் ரீ-டேக் எடுத்தனர். அப்போது மீண்டும் அதேபோல தடவினார். பின்னர் மூன்றாவது டேக் எடுத்தபோது அந்த நபரை கையும் களவுமாக பிடித்துவிட்டேன்.
உடனே அவனது கையை பிடித்து இழுத்து சென்று ஸ்டண்ட் மாஸ்டரிடம் கொண்டு வந்து நிறுத்தினேன். அவர் அந்த நபரை தட்டிக் கேட்காமல் எனது கன்னத்தில் ஓங்கி அரைவிட்டார். நான் அப்படியே ஷாக் ஆகிப்போய் நின்றேன். அவர் அடித்ததை அங்கிருந்த யாரும் தட்டிக்கேட்கவில்லை. அந்த சம்பவம் என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. பின்னர் நடிகர் சங்கத்திடம் இதுகுறித்து புகார் அளித்தேன். அப்போது அந்த நடிகர் சங்க தலைவர் இதையெல்லாம் மறந்துவிட்டு நடிக்க சொன்னார்.
அங்கிருந்த இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள் யாருமே எனக்கு நடந்த அநீதியை தட்டிக் கேட்கவில்லை, குரல் கொடுக்கவும் வரவில்லை. நான் அங்கிருந்து கிளம்பி வந்து விட்டேன். என்னுடைய நண்பர் புகார் கொடுக்க சொன்னார். பின்னர் போலீசிடம் சென்றேன். இந்த சம்பவத்தில் எனக்கு யாருமே ஆதரவு கொடுக்கவில்லை என்பதால் சினிமாவை விட்டு சில காலம் விலகி இருந்தேன். அந்த ரணத்திலிருந்து என்னால் இன்னும் மீள முடியவில்லை.
20 ஆண்டுகளுக்கு மேலாக நான் சினிமாவில் நடிக்காததற்கு காரணமும் இதுதான்.” என்று அவர் கூறினார். இப்படி விசித்ரா பேசிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அவர் சொன்ன இந்த சம்பவம் பலேவடிவி பாசு என்கிற தெலுங்கு படத்தில் நடித்தபோது நடந்ததாகவும், அப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் ஏ.விஜய் என்பவர் தான் விசித்ராவை கன்னத்தில் அறைந்ததாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அப்படத்தில் பாலகிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.