பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவானது விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து ஏழாவது சீசன் வரை வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். ஏற்கனவே, ஆறு சீசன்கள் வெவ்வேறு போட்டியாளர்களுடன் நடந்து முடிந்த நிலையில், இப்போது சீசன் 7 ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் பிரபலமாகி விடலாம் மற்றும் சினிமாவில் நிறைய வாய்ப்பு கிடைக்கும் என்ற எழுதப்படாத விதி ஒன்று உள்ளது. இதனாலேயே பிக்பாஸ் ஷோவில் கலந்து கொள்ள வேண்டுமென நிறைய பேர் போட்டிபோட்டுக் கொண்டு கலந்து கொள்வார்கள். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்களிடையே சீரியலுக்கு இணையான வரவேற்பு கிடைப்பதால், விஜய் தொலைக்காட்சியும் டாப் டிரெண்டிங்கில் இருக்கும் சீரியல்களின் நேரத்தை பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக மாற்றியுள்ளது.
கடந்த அக்டோபர் 1 முதல் பிக் பாஸ் சீசன் 7 தொடங்கியுள்ளது. இந்த சீசனில் இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த சீசனில் இப்போது போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் வகையில் ‘Know Your Housemates’ என்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இவர்களில் நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமாரும் ஒருவராவார். மேலும், இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் தாங்கள் எந்த அளவுக்கு பிரபலம் என்பதை விவாதிக்க வேண்டும். இந்த டாஸ்க் தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சரவணன் மற்றும் ஜோவிகாவுக்கு இடையில் நடந்து வருகிறது. ஜோவிகா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தபோதே, பலரும் வனிதா விஜயகுமாரின் மகள் என்பதால், “அம்மாவைப் போல ஜோவிகாவும் சண்டை போடப் போகிறார்” என்று எண்ணியிருந்தனர்.
ஆனால், ஜோவிகா அம்மாவின் கேரக்டரில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் போல பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டை போடாமல் இயல்பாக இருக்கிறார். குறிப்பாக, தற்போது நடைபெற்ற டாஸ்க்கில் பங்கேற்றுப் பேசிய ஜோவிகா, தனக்குப் படிப்பில் நாட்டம் இல்லை என்பதால் இடையிலேயே படிப்பை விட்டுவிட்டதாகவும், நடிப்பில் தனக்கு ஆர்வம் இருப்பதால் தன் அம்மா ஊக்குவித்து வருகிறார் என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, தான் படித்த பள்ளியில் படிப்பைத் தவிர மற்ற செயல்பாடுகளுக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும் ஜோவிகா தன் வேதனையை வெளிப்படுத்தினார். மேலும், டிபெட் டாஸ்க்கில் பேசிய போது, “நான் ஒரு விஷயத்தை சொல்ல விருப்பப்படுகிறேன். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 2 நாட்களில் எனக்கு சந்தோஷமான விஷயம் என்னவென்றால், என் பள்ளியில் நான் சில டிபேட்களில் கலந்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறேன்.
ஆனால், அங்கு என்னை யாரும் ஊக்குவிக்கவில்லை. இப்போது இந்த பிக்பாஸ் மூலம் எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் பயன்படுத்திய போதுதான், எனக்குள் இருக்கும் திறமையை நான் உணர்ந்தேன்” என கண்ணீர் மல்கப் பேசியுள்ளார். ஜோவிகா விஜயகுமாரின் இந்த நெகிழ்ச்சியான பேச்சைக் கேட்ட சக போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து ஊக்கப்படுத்தினர். தற்போது இது குறித்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
எனவே, பிக்பாஸ் ரசிகர்களும் ஜோவிகாவுக்கு ஆதரவாக கமெண்டுகளை அள்ளி எரிகின்றனர். கூடவே, அம்மாவைப் போல் அல்லாமல் இயல்பாக இருக்கும் ஜோவிகாவைப் பாராட்டி வருகின்றனர். எது எப்படியோ… இதை அவ்ளோ ஈஸியா இவங்க இப்டிதான்னு யாரையும் ஜட்ஜ் பண்ண முடியாது… போகபோகத்தான தெரியும் ஒவ்வொருத்தரோட குணாதிசயமும்…