நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. லியோ படத்தில் த்ரிஷா நடித்திருந்தார். கிளைமாக்ஸ் காட்சியில் மன்சூர் அலிகான் நடித்தார். அதில் விஜய் குறித்து பிளாஷ்பேக் சொல்லும் காட்சி அவருக்கு கொடுக்கப்பட்டது. சில நிமிடங்கள் மட்டுமே அவர் நடித்திருந்தார்
இந்நிலையில் முன்னதாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் நடிகை த்ரிஷாவுடன் நடிக்க முடியாதது பற்றி மன்சூர் அலிகான் ஆபாசமான முறையில் பேசியிருந்தார் “வில்லனையே போட மாட்டேன் என்கிறார்கள், பாலியல் வன்முறை செய்ய விட மாட்டேன் என்கிறார்கள். எனக்கு ஆசையாக இருந்தது. த்ரிஷாவுடன் நடிக்க வேண்டுமா.. கட்டிலில் குஷ்புவை, ரோஜாவை கிடத்தியது போல் த்ரிஷாவையும் போடலாம் என நினைத்தேன். 150 படங்களில் நான் செய்யாத பாலியல் வன்முறையா..” என தகாத முறையில் கொச்சையாகப் பேசினார்.
இதனிடையே மன்சூர் அலிகான் பேச்சு பார்த்து கடுப்பான த்ரிஷா, “சமீபத்தில் மன்சூர் அலிகான் என்னைப் பற்றி கேவலமாகவும், பாலியல் ரீதியாகவும் பேசிய ஒரு வீடியோவை பார்த்தேன். இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். மேலும் இது பாலியல் அவமரியாதை, மோசமான ரசனையானாக பார்க்கிறேன். அவர் ஆசைப்படலாம் ஆனால் நான் அவரைப் போன்ற ஒருவருடன் என் நடிப்பை பகிர்ந்து கொள்ளாதது நினைத்து நிம்மதியடைகிறேன்
மேலும் எனது திரையுலக வாழ்க்கை முழுவதும் அவருடன் சேர்ந்து நடிக்கமாட்டேன். ஒரு படம் தான் நடித்தோம், இனியும் சேர்ந்து நடிக்க போவது கிடையாது. பார்த்துக் கொள்கிறேன். இவரைப் போன்றவர்கள் மனித குலத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள் “ என தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார். மேலும் த்ரிஷாவிற்கு ஆதரவாக பலர் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி மன்சூர் அலிகானை மன்னிப்பு கேட்க கூறியும் பலர் கூறினர்.
இதனிடையே பல எதிர்ப்புக்கு மத்தியில், விளக்கமளித்த மன்சூர் அலிகான் நான் பேசியதை திட்டமிட்டே வேறு மாதிரி கட் செய்து தவறாக பரப்புவதாகவும் பின்பு என்னைப் பற்றி மக்களுக்குத் தெரியும். அவர்கள் என் பக்கம் நிற்கிறார்கள். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கக்கூடிய ஆள் இல்லை எனவும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து மன்சூர் அலிகான் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டார். பின்பு அதனைத் தொடர்ந்து நடிகை த்ரிஷாவும் ‘தவறு செய்வது மனித குணம்; மன்னிப்பது தெய்வ குணம்’ என பதிவிட்டு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். பின்பு இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்பியது சென்னை காவல்துறை. மன்சூர் அலிகானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் திரிஷாவிடம் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் மன்சூர் அலிகான், த்ரிஷா மீது மான நஷ்ட வழக்கு தொடரப் போவதாக கூறினார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் பேசிய மன்சூர் அலிகான், தப்பே செய்யாத நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த வீடியோவை முழுசா ஒருமுறை பாருங்க, அதுல நான் தப்பா பேசி இருந்தா என்னை நடுரோட்டில் நிற்கவைத்து கல்லால் அடிங்க. மேலும் காவல்நிலையத்திற்கு சென்று சில கேள்விகளுக்கு பதில் அளித்தேன் வீட்டிற்கு வந்ததும், நைட் தூக்கம் வரவில்லை. இதனால், பார்த்திபன் ஸ்டைலில் ஒரு அறிக்கையை என் பிஆர்ஓவிடம் தொலைபேசியில் சொன்னேன்.
அடக்க நினைத்தால் அடங்கமறு, திரைநாயகி த்ரிஷாவே என்னை மரணித்துவிடு. இது தான் நான் சொன்னது. தொலைபேசி வாயிலாக என்னை மரணித்துவிடு என தெரிவித்ததை மன்னித்துவிடு என பிஆர்ஓ தவறாக புரிந்துகொண்டார். மரணித்துவிடு என கூறியது மன்னித்துவிடு என வார்த்தை பிழையாகிவிட்டது. எனக்கே அதிர்ச்சியில் இருந்து மீழ முடியவில்லை. மீண்டும் பிரச்சனையை வளர்க்க வேண்டாம் என்பதால் அந்த நேரத்தில் அமைதியாக இருந்துவிட்டேன். ” என தெரிவித்துள்ளார்.