ஹைதராபாத் : மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்தவர், தனுஷ் உடன் ஜோடி சேர்ந்து மாரி படத்தில் ரவுடி பேபி பாடலின் மூலம் பிரபலமானார். தனது வசீகர துள்ளலான குடும்பப்பாங்கான தோற்றத்தால் தமிழக ரசிகர்களை கிறங்கடித்தவர் சாய் பல்லவி. தமிழில் சில படங்களே நடித்திருந்தாலும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். இவர் நடிகர் நாகர்ஜுனா மகனுடன் கிசுகிசுக்கப்பட்டிருந்தார்.
இவர் தெலுங்கில் நடிகர் ராணா டகுபதியுடன் இணைந்து நடித்துள்ள விராட பர்வம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்துகொண்ட சாய்பல்லவி கூறிய கருத்து அவரை காவல்நிலையம் வரை கொண்டுபோய் விட்டிருக்கிறது.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாய்பல்லவி செய்தியாளர்களிடம் ” சமீபத்தில் வெளியாகியிருந்த காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படத்தை பார்த்தேன். அதில் ஹிந்து பண்டிட்கள் இஸ்லாமியர்களால் கொல்லப்படுவது போல காட்சியமைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் பசுக்களை கடத்தியதாக கூறி இஸ்லாமியர் ஒருவரை அடித்து துன்புறுத்தியதோடு அவரை ஜெய்ஸ்ரீராம் என கூறச்சொல்லி தாக்கியுள்ளனர்.
இந்த இரண்டு சம்பவத்திற்கும் வேறுபாடு இல்லை. மதத்தின் பெயரால் யாருக்கும் எந்தவொரு தொந்தரவும் கொடுக்க கூடாது. அதுவே எனது கருத்து” என கூறினார். இதை தொடர்ந்து சாய்பல்லவிக்கு எதிராக கண்டனங்கள் குவிந்தவண்ணம் உள்ளன. மேலும் அவர் கூறிய கருத்தை திரும்ப பெறவேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் ஹைதராபாத்தில் அமைந்துள்ள சுல்தான் பஜார் காவல்நிலையத்தில் சாய்பல்லவி மீது புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதியவில்லை என போலீசார் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் சிலர் கூறுகையில் படத்தை விளம்பரப்படுத்த இது போன்ற சர்ச்சை கருத்தை சாய்பல்லவி கூறியுள்ளார் என விமர்சித்து வருகின்றனர்.