எப்போதும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தொடங்கிய பின்பு தான் பரபரப்பாக பேசப்பட்டு வரும். ஆனால் இந்த முறை, சீசன் குறித்த அறிவிப்பு வெளியாகும் முன்னரே பரபரப்பு கிளம்பியுள்ளது. ஏனெனில் பிக்பாஸ் சீசன் 8ல் இருந்து கமல்ஹாசன் விலகுவதாக அறிவித்திருந்தார். இதனால் அடுத்த பிக்பாஸ் தொகுப்பாளர் யார் என்ற கேள்வியும், எந்த பிரபலங்கள் சீசனை தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்ற ஆர்வமும் மக்களிடையே அதிக அளவில் எழுந்துள்ளது.
இந்நிலையில் தான் தற்போது பிக்பாஸானது, நயன்தாராவை தான் அடுத்த தொகுப்பாளராக தேர்வு செய்துள்ளது என்ற தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமல்ஹாசன், தனது சுவாரஸ்யமான பேச்சுகளால் வார இறுதி நாட்களை விறுவிறுப்பாக்கி, கன்டஷ்டென்ட்களுக்கு தகுந்த அறிவுரையையும் வழங்கி வந்தார். இப்படி தொடர்ந்து 7 சீசன்களை நடத்தி வந்த கமல் இனி இல்லை என்றால், பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்குமா அல்லது படுத்துவிடுமா என ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்விகள் எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, எட்டாவது சீசனை தொகுத்து வழங்கப் போவது யார் என பல தரப்பில் இருந்து கேள்விகள் எழுந்தவரும் நிலையில், ஒரு சிலர் கமல்ஹாசனுக்கு உடல்நிலை சரியில்லாத போது ரம்யா கிருஷ்ணன் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், இந்நிலையில் அவர்தான் மீண்டும் தொகுத்து வழங்கப் போகிறார் என்றும், மறுப்பக்கம் ரம்யா கிருஷ்ணனைவிடவும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு அல்டிமேட் ஆக தொகுத்து வழங்கினார், அதனால் அவர் தான் அடுத்த தொகுப்பாளர் என்றும் கூறி வந்தனர்.
மேலும் இது தொடர்பாகவும் பிக்பாஸ் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் தகவல்கள் வெளியானது. அதேபோல் சிம்பு மட்டுமின்றி நடிகர் சூர்யாவிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஏனெனில் சூர்யாவுக்கு, நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனுபவம் இருப்பதால், இவரை பிக்பாஸ் தேர்வு செய்திருக்கிறது. ஆனால் சூர்யாவிடம் கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் தற்போது என்னால் தொகுத்து வழங்க இயலாது என்று மறுத்துவிட்டதால், சூர்யா தொகுத்து வழங்கப்போவதில்லை என்பது உறுதியானது.
இதற்கிடையே தான் யாரும் எதிர்பார்க்காத விதமாக, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிடமும் பிக்பாஸ் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் விக்னேஷ் சிவனுடனான திருமணத்திற்கு பிறகு நயன்தாரா, மிகவும் நேர்த்தியாகவும், வார்த்தைகளில் கவனத்துடனும் பேசி வருவதால், பல நேர்காணல்களில் தனது தெளிவான பேச்சால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
இதனால் நயன்தாராவை வைத்து பிக் பாஸ் சீசன் 8ஐ ஹிட்டாக்கி விடலாம் என முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இப்படி ஒரு புறம் நயன்தாரா தான் அடுத்த தொகுப்பாளர் என்ற பேச்சு ஓடிக்கொண்டிருக்கும்போது, திடீரென விஜய் சேதுபதி தான் அடுத்த தொகுப்பாளர் என்ற தகவல்கள் வெளிவர தொடங்கின. தனது இயல்பான பேச்சால் மக்களிடம் செல்வாக்கை பெற்ற விஜய் சேதுபதி, ஏற்கனவே இது போன்ற ரியாலிட்டி ஷோக்களையும் தொகுத்து வழங்கி, ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார்.
குறிப்பாக, மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை strict-ஆக தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியையும் அதேபோல் தொகுத்து வழங்குவார் என்று விஜய் சேதுபதியிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தான் நானும் ரவுடிதான் படத்தில் ஜோடியாக நடித்த இருவரும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில், நீயா நானா என்று போட்டி போடும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் கண்டிப்பாக நயன்தாராவோ அல்லது விஜய் சேதுபதியோ, இவர்களில் யாராவது ஒருவர் தான் பிக்பாஸ் தொகுப்பாளர் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.