1982-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான நெஞ்சங்கள் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா. தொடர்ந்து எங்கேயோ கேட்ட குரல், திருப்பம், அன்புள்ள ரஜினிகாந்த் உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, 1990-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான நவயுகம் என்ற படத்தின் மூலம் நாயகியாக உயர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து ஒரு புதிய கதை என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான மீனா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள மீனா தற்போது முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை மீனாவின் கணவர் கடந்த ஆண்டு காலமான நிலையில் அவர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பல மாதங்கள் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் அவரது நெருங்கிய தோழிகள் மற்றும் உறவினர்கள் அவரை மிக குறுகிய காலத்தில் துக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வந்து விட்டனர். அப்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக நடிகை மீனா தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் மீனா. சமிபத்தில் ரஜினியுடன் மீனா நடித்திருந்த முத்து படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், அந்தப் படத்தின் FDFSவை ரசிகர்களுடன் இணைந்து மீனா ரோஹினி திரையரங்கில் பார்த்தார். அந்த இனிமையான அனுபவத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் மீனா கமல் பற்றி பேசிய ஒரு நேர்காணல் தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர் பேசியதாவது, “கமல் ஹாசன் சாரின் படம் என்றால் லிப் டு லிப் கிஸ் காட்சி கண்டிப்பாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வை சண்முகி படத்தை எடுக்க முடிவு செய்தபோது அதைப் பற்றி யோசிக்கவில்லை. என் மனதில் பல விஷயங்கள் இருந்ததால் இது எனக்கு நினைவில் இல்லை. இரண்டாம் நாள் உதவி இயக்குநர் வந்து முத்தக் காட்சி இருக்கிறது என்றார். நான் பயந்துவிட்டேன்.
ஐயோ, இதைப் பற்றி யோசிக்கவில்லை, எப்படி செய்வது என பயந்தேன். என்னால முடியாது, டைரக்டரிடம் சொல்லுங்கள் என சொன்னேன். அதற்குள் ஷாட் ரெடி என்று சொல்லி அழைத்தார். நான் அழ ஆரம்பித்தேன். இந்த உரையாடல் எனக்கும் என் அம்மாவுக்கும் இடையில் நடந்தது. அங்கு யாருக்கும் தெரியாது. காட்சியின் போது கமல் சார் அருகில் வந்து இந்த முறை நோ லிப் லாக் என்று சொன்னார். அப்போது தான் எனக்கு உயிர் வந்தது.
அப்போது இதுபோன்ற விஷயங்களைப் பற்றி பேச எனக்கு வசதியாக இல்லை. அவர்கள் அனைவரும் பெரிய மனிதர்கள். அதனால் அப்போதேல்லாம் என் எல்லா விஷயங்களையும் அம்மா பார்த்துக் கொள்வார்” என்றார். கமல் நடிப்பில் அவ்வை சண்முகி திரைப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியாகி நகைச்சுவையில் பட்டையை கிளப்பியது. இந்த படத்தை கே.எஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார். கிரேஸி மோகன் திரைக்கதை எழுதியிருந்தார். மேலும் இத்திரைப்படத்தில் மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன், ஹீரா, மணிவண்ணன், நாசர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட ஒரு நடிகர் பட்டாளமே நடித்திருந்தனர்.