தற்பொழுது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், நடிகை விசித்ராவும், ஜோவிகாவும் கல்வி குறித்து விவாதித்ததுதான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதில் விசித்ரா, ’அடிப்படை கல்வி என்பது மிகவும் முக்கியமானது. அதனால் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்து முடித்துவிடு’ என்று ஜோவிகாவுக்கு அறிவுரை கொடுத்தார்.
இதற்கு ஜோவிகா, ”எனக்கு படிப்பு வரல. அதனால் தான் நான் 9-ம் வகுப்போடு நிறுத்திவிட்டேன். என்னைப்போல் ஏராளமான குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்காக தான் நான் இங்கு வந்திருக்கிறேன். படிச்சா தான் முன்னேற முடியும் என்பது கிடையாது. எல்லாரும் டாக்டருக்கு படிச்சா யாரு கம்பவுண்டர் வேலை பார்ப்பது. இப்படி படிக்க சொல்லி வற்புறுத்துவதால்தான் நீட் மரணங்கள் நடைபெறுகின்றன” எனக் கூறி ஆவேசமாக பேசினார்
இந்த விவகாரம் சர்ச்சையான பிறகு, பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி நிகழ்வில் பேசிய கமல்ஹாசன் தொடக்கத்திலிருந்தே இந்த விவகாரம் குறித்து பேசினார். பங்கேற்பாளர்களிடம் நேரடியாக பேசுவதற்கு முன்பாக அவர், “உயிரை கொடுத்தாவது கல்வி என்பது முக்கியம் இல்லை என்று நினைப்பவன் நான். கல்வி தான் கலங்கரை விளக்கம் என்று கூறுகிறார்கள்.
ஆனால் காட்டில் வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் போது, கலங்கரை விளக்கம் ஏது? கடலுக்கு போனால் தான் கலங்கரை விளக்கம். நீ படிக்காதவன், நீ கல்வியைப் பற்றி கிண்டல் அடிக்கிறீயா என என்னை கேட்பார்கள். சமீபமாக என்னை பார்த்து இவ்வளவு படிக்கிறீர்களா என கேட்கிறார்கள். நான் விட்டதை பிடிக்கிறேன். தான் விட்டதை எப்போது பிடிக்க வேண்டும் என ஜோவிகா முடிவு செய்து கொள்ளட்டும்.” என்று பேசினார்.
இந்நிலையில் ஜோவிகா விஜயகுமார் குறித்து கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான கஸ்தூரி. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி விசித்திரா – ஜோவிகா இடையே படிப்பு குறித்து நடந்த விவாதம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். “நானும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அதற்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்த்ததும் இல்லை, அதற்கு பிறகு நான் பார்க்கவில்லை.
ஆனால் ஜோவிகா – விசித்திரா இடையே நடந்த விவாதம் பற்றிய வீடியோவை நான் இணையத்தில் பார்த்தேன்.” என்றார். மேலும, “படிப்புக்கும் திறமைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. இரண்டும் வெவ்வேறு விஷயங்கள். ஆனால் ஒருவருக்கு அடிப்படைக் கல்வி என்பது அவசியம். அது அவர்களை எந்த இக்கட்டான சூழலிலும் ஏதாவது ஒரு வழியில் கைகொடுக்கும். ஜோவிகாவிற்கு ஒரு பலமான பேக்கிரவுண்ட் உள்ளது, பணம் உள்ளது,
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமாகி விட்டார் என்பதால் அவருக்கு படிப்பு தேவையில்லை. ஆனால் போராட்டத்துடன் வாழ்க்கையை எதிர் கொள்பவர்களுக்கு படிப்பு அத்தியாவசியமானது. அழகை வைத்து காலம் முழுவதும் பிழைப்பை நடத்த முடியாது.” என்று பேசியுள்ளார்.
அதுமட்டுமின்றி”குறைந்தபட்ச படிப்போ அல்லது அடிப்படையான படிப்பு இருந்தால் வாழ்க்கையை துணிச்சலோடு எதிர்கொள்ள முடியும்.
கலைத்துறையை தேர்ந்து எடுத்துள்ள ஜோவிகாவுக்கு சம்பளம் கிடைக்குமா இல்லையா என்பது தெரியாது. ஜோவிகா வனிதாவின் மகள் என்ற காரணத்தால் மட்டுமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதுவும் 18 வயது முடிந்த உடனே கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. இது அவர் ஒரு சாதாரண பெண்ணாக இருந்து இருந்தால் இப்படி ஒரு வாய்ப்பு அமைந்து இருக்குமா? விஜய் டிவிக்கும் வனிதாவிற்கும் இருக்கும் நட்பு மூலம் தான் ஜோவிகாவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது” என கஸ்தூரி பேசியுள்ளார்.