விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினர் மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் வெள்ளம்போல் திரண்டு வந்து கலந்துகொண்டனர். மேலும் பலர் இன்னமும் அவரது சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கடந்த வாரம் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய கையோடு, சாலிகிராமத்தில் அமைந்துள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்துள்ள பேட்டி வைரலாகியது.
தமிழில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நாயகியாக நடித்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.ஆனால், சமீப காலமாக இவர் படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறவில்லை. பின் கடைசியாக இயக்குனர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் வெளிவந்த தீராக் காதல் படத்தில் ஜெய்யுடன் நடித்து இருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு ஐஸ்வர்யா சென்றிருக்கிறார். அங்கு பத்திரிக்கையாளர்கள் ஐஸ்வர்யாவிடம் விஜயகாந்தின் மறைவுக்கு வராதது தொடர்பான கேள்வியால் கடுப்பான நடிகை ஐஸ்வர்யா, நாம் கடை திறப்புக்காக வந்துள்ளோம், அதை பற்றி மட்டும் பேசலாம் என்று சற்று காட்டமாக பதில் அளித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “விஜயகாந்த் இறப்பு ரொம்ப வருத்தம் தான். நான் ஊரில் இல்லை. வந்தவுடன் இந்த விழாவிற்காக வந்துவிட்டேன். நடிகர் சங்கத்துக்கு விஜயகாந்த் பெயர் வைப்பது சரி என்றால், அதை வைப்பதில் தவறில்லை. எல்லாருடைய கருத்து தான் என்னுடைய கருத்தும்.” என்று பேசியுள்ளார்.
இந்த நிகழ்விற்கு மறுநாள் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் கேப்டன் சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்றிருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயகாந்த் மரணம் வருத்தம் தருவதாகவும் தாம் ஊரில் இல்லை என்றும் புதுச்சேரியில் இருந்ததால் தன்னால் அஞ்சலி செலுத்த வரமுடியவில்லை எனவும் காரணம் கூறினார். புதுச்சேரிக்கும் சென்னைக்கும் 3மணி நேர பயணத்தில் வந்துவிட முடியும் என்பதை கூட உணராமல் தாம் ஏதோ வெளிநாட்டு படப்பிடிப்பில் இருந்ததை போல் நான் ஊரில் இல்லை என சிம்பிளாக கூறினார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இதனால் பலர் ஐஸ்வர்யா ராஜேஷ் கண்டனம் தெரிவித்தனர். அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் எல்லாம் அவரை திட்டி தீர்த்தனர். இந்த சூழலில் நடிகரும், விஜயகாந்த்துக்கு நெருக்கமாக இருந்தவருமான மீசை ராஜேந்திரன் ஐஸ்வர்யா ராஜேஷை வெளுத்து வாங்கியுள்ளார். “விஜயகாந்த் இறந்தபோது நேரில் வந்து அஞ்சலி செலுத்திய ரஜினி, கமல், விஜய், விஜய் சேதுபதி ஆகியோர் எல்லாம் நடிகர்கள் இல்லை.
அவர் இறந்து ஒரு வாரம் கழித்து நினைவிடத்துக்கு வந்து நடிக்கிறார்கள் பாருங்கள் அவர்கள்தான் அருமையான நடிகர்கள். சிறப்பாக நடிக்கிறார்கள். சூர்யாவோ விஷாலோ நினைத்திருந்தால் ஒரு விமானத்தை பிடித்து அடுத்த நாளே வந்திருக்கலாம். ஆனால் அவர்கள் வரவில்லை. இவர்கள் எல்லாம் விஜயகாந்த்துக்காக வரவில்லை. கலைஞர் 100 விழாவுக்காக வந்தவர்கள். மக்கள் திட்டுவார்கள் என்பதால் விஜயகாந்த்தின் நினைவிடத்துக்கு வந்துவிட்டு கலைஞர் 100 விழாவுக்கு போனார்கள்.
ஐஸ்வர்யா ராஜேஷ் எல்லாம் விஜயகாந்த்தின் கால் தூசி. விஜயகாந்த்தை பற்றி பேசுவதற்கு அவருக்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது.நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தவர் விஜயகாந்த். எனவே நடிகர் சங்க கட்டடத்துக்கு அவர் பெயரை வைப்பீர்களா என செய்தியாளர்கள் கேட்டால் மழுப்பலாக பதில் சொல்கிறார். இவர்கள் எல்லாம் சும்மா நடிக்கிறார்கள். திரையுலகில் உள்ள எல்லொருமே விஜயகாந்த்தின் மூலம் பயன் அடைந்தவர்கள்தான். ஆனால் அவர்களுக்கு எல்லாம் நன்றி உணர்ச்சியே இல்லை. நடிகர் சங்கம் ஒன்றுமே செய்யவில்லை.” என மீசை ராஜேந்திரன் கடுமையாக நடிகர் சங்கத்தை விளாசியுள்ளார்.