ஒரு கிராமமே படிக்க காரணமான விஜய்… மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவம்…

0
Follow on Google News

நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் முக்கிய நட்சத்திரம் ஆவார். தளபதி விஜய்க்கென தமிழகம் முழுவதும் ரசிகர் மன்றங்களும், விஜய் மக்கள் இயக்கமும் உள்ளன. விஜய் ரசிகர் மன்றமும் சரி, விஜய் மக்கள் இயக்கமும் சரி, சுதந்திர தினம், அம்பேத்கர், காமராஜர் போன்ற முக்கிய தலைவர்களின் பிறந்த தினம் மற்றும் நடிகர் விஜய் பிறந்த நாள் போன்ற முக்கிய தினங்களில் இரத்த தானம் செய்வது, ஏழை மக்களுக்கு உணவு வழங்குவது, குழந்தைகளுக்கு இலவச நோட்டுப் புத்தகம் வழங்குவது எனத் தொண்டு பணிகளில் களமிறங்கி விடுவர். இவ்வாறு நடிகர் விஜயாலும், அவரது ரசிகர் மன்றங்களாலும் பல்வேறு நலப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதேபோல, அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள அட்டப்பாடி என்ற மலைகிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அனைவரும் நடிகர் விஜயினால் கல்வியறிவைப் பெறத் தயாராகி உள்ளார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும். ஆம், தளபதி விஜய் என்ற ஒற்றை வார்த்தையைக் கூறி கேரளாவில் உள்ள ஒரு மலை கிராம மக்கள் அனைவரையும் படிக்க வைக்கும் முயற்சியில் களம் இறங்கியிருக்கிறார் கலெக்டர் உமேஷ் கேசவன் IAS.

தமிழ்நாட்டுக்கு அடுத்து விஜய்க்கு அதிக ரசிகர்களை கொண்ட மாநிலம் கேரளா என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்களை விட அதிக திரையரங்குகளில் பல விஜய் படங்கள் வெளியாகி இருக்கிறது. கேரளாவில் விஜய்க்கு சிலை வைக்கும் அளவிற்கு மலையாளிகளுக்கு விஜய் மீது பிரியம்.

அப்படி இருக்கையில், கேரளாவின் பாலக்காட்டு மாவட்டத்தின் சப் கலெக்டர் உமேஷ் கேசவன் அவர்கள், சாலை வசதி, தெரு விளக்கு மற்றும் கழிவறை வசதி கூட இல்லாத மலை கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களிடையே கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நடிகர் விஜயை அழைத்து வரப் போவதாக தெரிவித்துள்ளார். சப் கலெக்டர் உமேஷ் கேசவன் பழங்குடியின மக்கள் வசிக்கும் அட்டப்பாடி பகுதிக்கு சென்று ஆய்வு செய்த போது, அரசாங்கத்தின் மீது அம்மக்களுக்கு வெறுப்பு இருப்பதையும், அங்கிருக்கும் சிறார், சிறுமியருக்குக் கூட பள்ளி செல்ல விருப்பமில்லை என்பதையும் தெரிந்து கொண்டார்.

மேலும், அந்த மக்களுக்கு தங்கள் சமூகத்தை தாண்டி என்ன நடக்கிறது என்பதில் ஈடுபாடு இல்லை என்றும், விவசாய வேலை இல்லா நாட்களில் டி.வி.யில் நடிகர் விஜயின் படங்களைப் பார்த்து ரசிப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டறிந்த சப் கலெக்டர் மலைகிராம மக்கள் பற்றி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, ” அரசாங்கம் ஒதுக்கிய கோடிக்கணக்கான பணத்தில் எதுவும் அம் மக்களைச் சென்றடையவில்லை.

ஆனால், அவர்களைச் சென்றடைந்திருக்கும் ஒரே விஷயம் ‘விஜய்” என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, விஜயின் தீவிர ரசிகர்களாக இருக்கும் மலைவாழ் மக்களிடையே கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நடிகர் விஜயை அழைத்து வரப் போவதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் ஓய்ந்துவிடாத கலெக்டர், விஜய்யை நேரில் சந்தித்து, இங்கு நடந்த அத்தனை விஷயங்களையும் கூறி இருக்கிறார்.

இதை கேள்விப்பட்ட விஜய் திகைத்துப் போனாராம். அத்துடன், ” நீங்கள் எப்பொழுது கூப்பிட்டாலும் நான் அந்த கிராமத்து மக்களை சந்திக்க தயாராக இருக்கிறேன். அதனால் இந்த மாதிரி நல்ல விஷயத்தை தொடர்ந்து செய்யுங்கள்” என்றும் கலெக்டரை விஜய் பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. இதிலிருந்து ரசிகர்களிடையே சினிமா ஏற்படுத்தும் தாக்கம் எவ்வளவு பெரியது என்பது புரிந்து கொள்ள முடிகிறது.