போலீசாரிடம் சிக்கியது கடிதம்… விஜய் ஆண்டனி மகள் மரணத்துக்கு முன்பு கடிதத்தில் எழுதியது என்ன.?

0
Follow on Google News

பிரபல இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்டது திரையுலகினரை மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது. நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் அறையில் தூக்கிட்டுக் கொண்ட மீரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும், அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினர் தற்கொலைக்கான காரணத்தைக் கண்டறிய விஜய் ஆண்டனியின் வீட்டில் சோதனையிட்டனர். இந்நிலையில், மீரா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றினை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும், கடிதம் குறித்து பலரிடம் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். ஆரம்பகாலத்தில் சவுண்ட் என்ஜினியராக சினிமாவிற்குள் நுழைந்த இவர், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, இசையமைப்பாளராக உருவெடுத்தார். சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்த விஜய் ஆண்டனி நான், சலீம், காளி, சைத்தான், பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்து ஹிட் கொடுத்தார்.

சவுண்ட் எஞ்சினியர் முதல் தயாரிப்பாளர் வரை சினிமாவில் பல அவதாரங்களை எடுத்த விஜய் ஆண்டனியின் வாழ்க்கை அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. விஜய் ஆண்டனி, தனக்கு 7 வயதாக இருக்கும் போதே, தன் அப்பா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அதனால் அவரது அம்மா தன்னையும் தன் தங்கையையும் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்து வந்ததாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

மேலும், எந்தப் பிரச்சினைக்கு தற்கொலை ஒரு தீர்வாகாது, நான் தற்கொலைக்கு எதிரானவன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 2006ஆம் ஆண்டு பாத்திமா என்பவரை திருமணம் செய்த விஜய் ஆண்டனிக்கு மீரா, லாரா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா சென்னை சர்ச் பார்க் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். ஸ்போர்ட்ஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட மீரா பேட் மிண்டன் ப்ளேயராக பல பரிசுகளையும் வென்றிருக்கிறார்.

இந்நிலையில், அவர் நேற்று தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்திருப்பது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை நடத்திய விசாரணையில், மீரா கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்திற்கான சிகிச்சை பெற்று வந்ததாகவும், முந்தைய நாள் தோழிகளுடன் வெளியே சென்று விட்டு சகஜமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அப்படி இருக்கையில் மீரா ஏன் திடீரென விபரீத முடிவை எடுத்தார் என்பது மர்மமாகவே உள்ளது. மேலும், மீராவின் மொபைல் உள்ளிட்ட அனைத்தையும் காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தான், காவல்துறைக்கு மீராவின் கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில் மீரா, ஆங்கிலத்தில் மிக உருக்கமாக 10 வரிகளுக்கு கடிதம் எழுதி வைத்திருப்பதாகவும் அதிகாரிகள் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக, love you all miss u all என்று தொடங்கிய கடிதத்தில் “எனது குடும்பம் நான் இல்லாமல் தவிக்கப் போகிறது, நான் என் நண்பர்களையும் ஆசிரியர்களையும் மிஸ் செய்வேன்” என்றெல்லாம் மிக உருக்கமான வார்த்தைகளுடன் கடிதத்தை எழுதி வைத்துவிட்டுச் சென்றிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையனர் இப்போது இந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடிதத்தில் முழுமையாக என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதையும் காவல்துறை வெளியிடவில்லை.