செல்லமே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஷால் சண்டைக்கோழி, தாமிரபரணி, திமிரு என பல வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார். ஆனால் அதன் பிறகு அவர் நடித்த படங்கள் பெரும்பாலானவை பிளாப் தான் ஆனது. அவரும் கம்பேக் கொடுப்பதற்காக பல வருடம் போராடி, பிறகு மார்க் ஆண்டனி என்ற படம் மூலம் கம்பேக் கொடுத்தார்.
ஆனால் அதன் பிறகு அவர் நடித்த ரத்தினம் என்ற படம் மீண்டும் அவரை பின்னோக்கி கொண்டு சென்றது. இந்நிலையில் தான் சரியான படம் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கும் நடிகர் விஷாலுக்கு, நடிகர் சங்கமும் ஒரு மிகப் பெரிய ஆப்பு ஒன்றை வைத்துள்ளது. இனிமேல் நடிகர் விஷாலை வைத்து யாரும் படம் இயக்கக்கூடாது என முட்டுக்கட்டை போட்டுள்ளது.
நடிகர் விஷால் நடிப்பதை தாண்டி, விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் உருவாக்கி நடத்தி வருகிறார். மேலும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் தேர்வானார். அப்போது அவர் சங்கத் தலைவராக செயல்பட்டு வந்த காலகட்டத்தில் ஏகப்பட்ட முறைகேடுகள் செய்ததாகவும், ரூ.12 கோடியை அபேஸ் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதன் பின்னர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க செயற்குழுவில் விஷாலுக்கு ரெட் கார்டு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்தத் தொகையை அவர் திருப்பித் தர வேண்டும் என தற்போதைய சங்கத்தில் உள்ள நிர்வாகிகள் பலமுறை கூறி வந்தனர். ஆனால் அதற்கு விஷால் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதனால் கடந்த 2017 – 2019 ஆம் ஆண்டு வரை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த விஷால் மீது எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக, சங்கத்திற்கு புதிதாக ஒரு அதிகாரியைத் தமிழக அரசு நியமித்திருந்தது. சங்கத்தின் கணக்கு வழக்குகளைப் பார்க்க ஸ்பெஷலான அதிகாரிகளையும், ஆடிட்டர்களையும் நியமனம் செய்திருந்திருந்தனர். அந்த ஆடிட்டர்கள் கணக்கு வழக்குகளை சரிபார்த்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
அதில் விஷால் தலைவராக இருந்த சமயத்தில், சங்க நிதியை தவறான முறையில் பயன்படுத்தியிருப்பதாகவும் வரவு – செலவில் சுமார் ரூ.12 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர். முறைகேடாக பயன்படுத்திய அந்தத் தொகையை சங்கத்திற்கு திருப்பி கொடுக்க சொல்லியும் விஷால் பதிலளிக்காத காரணத்தால், இனிவரும் காலங்களில் அவரை வைத்து படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என அதிரடியாக கூறியுள்ளனர்.
ஒருவேளை அவரை வைத்து படம் தயாரிக்கவுள்ளவர்கள் சங்கத்தில் கலந்தாலோசித்த பிறகுதான் படத்திற்கான பணிகளை தொடங்க வேண்டும் எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியுள்ளது. இதனால் தற்போது நடிகர் விஷால், இனி படங்களில் நடிப்பது மிகப்பெரிய கேள்விக்குறி தான். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் தனது X தள பக்கத்தில், தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நான் இருந்தபோது செலவு செய்யப்பட்ட பணம் அனைவரது ஆலோசனைப்படியே கொடுக்கப்பட்டது என்றும்,
உங்கள் அணியில் இருக்கும் கதிரேசன் என்பவருக்கும் அது நன்றாகவே தெரியும். அந்த பணம் எல்லாம் நலிந்த தயாரிப்பாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்குமே செலவு செய்யப்பட்டது என விளக்கம் அளித்துள்ளார். மேலும், உங்களுடைய வேலையை ஒழுங்கா பாருங்க, இரட்டை வரி வசூல் முறை, தியேட்டர் பராமரிப்பு கட்டணம் என ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளன. அதையெல்லாம் ஒழுங்குப்படுத்துங்கள் என தயாரிப்பாளர் சங்கத்தையும் தாக்கி பேசியுள்ளார்.
மேலும் நான் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டு தான் இருப்பேன். என்னை யாராலும் தடுக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளார். இந்நிலையில் விஷால் வாய் கொழுப்பு எடுத்து என்ன தான் பேசினாலும், திரைப்பட இயக்குனர்கள், நடிகர் சங்கத்தின் பேச்சை தான் கேட்பார்கள். அதனால் விஷால் இனி திரைப்படங்களில் நடிப்பது கேள்விக்குறி உள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.