கண் கலங்கிய கிராம மக்கள்… கடவுளாக குறைகளை தீர்த்த விஷால்…

0
Follow on Google News

விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மாதம் 15 ஆம் தேதி வெளியானது. வினோத் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 28 ஆம் தேதி இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானது.

இதனிடையே இந்தப் படத்தின் இந்தி பதிப்பை வெளியிடுவதற்கு தணிக்கை குழு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக ஒரு பரபரப்பு புகாரை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் சிபிஐ தணிக்கை குழு அதிகாரிகள் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடந்து வருகிறது. இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியைக் கடந்து வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 13 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரையும் பகிர்ந்துள்ளது.

மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக விஷால் 34 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இப்படத்தில் யோகி பாபுவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளின் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பல கிராமங்களில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு குமாரசக்கணபுரம் கிராமத்திற்கு படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் விஷால், அக்கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாக பொதுமக்கள் கூறியதையடுத்து குடிநீர் வசதிக்கு ஏற்பாடு செய்ய முன்வந்துள்ளார்.

போர்வெல் இயந்திரங்கள் மூலம் அங்குள்ள கண்மாயின் கரையில் போர் போட்டுக்கொடுத்ததோடு, 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தண்ணீர் தேக்க தொட்டிகள் அமைத்துத்தர ஏற்பாடு செய்துள்ளார். தண்ணீர் பிடிப்பதற்கு ஏதுவாக 6 குழாய்களையும் பொருத்தி கொடுக்கும் பணி நடந்து வருகிறது. பணிகள் நிறைவடைந்த பின் அதன் திறப்பு விழாவிற்கு தான் கட்டாயம் வருவதாக கிராம மக்களிடம் கூறிச் சென்றுள்ளார் நடிகர் விஷால். படப்பிடிப்பிற்கு வந்த இடத்தில் கிராம மக்களின் தண்ணீர் தேவையை அறிந்து, நடிகர் விஷால் சொந்த செலவில் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்த சம்பவம் கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்கோரிக்கையை உடனே நிறைவேற்றுவதாக பொதுமக்களிடம் வாக்குறுதியளித்த நடிகர் விஷால், குமாரசக்கனாபுரம் ஊராட்சி தலைவர் ராமகிருஷ்ணனை சந்தித்து கலந்தாய்வு செய்து ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அம்மக்கள் பயன்பெறும் வகையில் தனது தேவி அறக்கட்டளை சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து கொடுத்துள்ளார். மேலும் 2 சின்டெக்ஸ் டேங்க் அமைத்து குடிநீர் வசதிக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஷாலின் இந்த செயலுக்காக கிராம மக்களும் பாராட்டி நன்றி தெரிவித்தனர். இதனிடையே ‘விஷால் 34’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து மூன்று மாதங்கள் நடைபெறும் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது. ஹரி விஷால் கூட்டணியில் ஏற்கனவே வெளியான தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த கூட்டணி 3-வது முறையாக இணைந்துள்ளது.