இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக அதிக பணச் செலவில் லைக்கா தயாரிப்பில் எடுக்கப்பட்டு வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கதையை இதற்கு முன்பு ஏற்கனவே எம்ஜிஆர், கமல்ஹாசன் போன்ற பல நடிகர்கள் திரைப்படமாக எடுக்க முயற்சித்து பின்பு எடுக்க முடியாமல் கைவிட்டனர்.
இந்நிலையில் தற்பொழுது மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடிகர் விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்திய தேவனாக கார்த்திக், நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டையாக சரத்குமார் மற்றும் குந்தவையாக த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் இரண்டு பாகங்களாக வெறியாகிறது.
முதல் பாகம் தற்பொழுது வெளியான நிலையில் இரண்டாவது பாகம் அடுத்த வருடம் ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான டப்பிங் வேலைகள் முடிந்து விட்டதால். அடுத்தடுத்த வேலைகள் மிக சுலபமாக முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. அதனால் வரும் தமிழ் புத்தாண்டு அன்று பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை 2011 ஆம் வருடம் மணிரத்தினம் தன்னுடைய சொந்த தயாரிப்பில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது பொன்னியின் செல்வன் படத்தை ஒரே பாதத்தில் எடுத்து முடிப்பதற்கான திரைகதையும் அமைத்துள்ளார் மணிரத்தினம். படத்தில் நடிப்பதற்கான நடிகர் நடிகைகளையும் தேர்வுசெய்துள்ளார் மணிரத்தினம்.
அதில், வந்தியதேவனாக நடிகர் விஜய், அருள்மொழி வர்மனாக தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், நந்தினியாக அனுஷ்கா மற்றும் பெரிய பழுவேட்டையராக சத்தியராஜ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த படத்தில் கமிட் செய்துள்ளார் மணிரத்தினம். இந்த நிலையில் படத்தின் தொடக்கத்திற்கான அனைத்து வேலைகளையும் தயார் செய்து படப்பிடிப்பு தொடங்குவதற்கான தேதியும் குறித்துள்ளார் மணிரத்தினம்.
இந்த சமயத்தில் மற்றொரு இயக்குனரிடம் கரிகாலச்சோழனின் கதையை மய்யமாக வைத்து கரிகாலன் என்கிற வரலாற்று படத்தில் கமிட்டானார் நடிகர் விக்ரம். இந்த நிலையில் ஒரே சமயத்தில் விக்ரம் இரண்டு வரலாற்று படங்களில் நடிப்பது மணிரத்தினத்திற்கு பிடிக்கவில்லை. மேலும் இரண்டும் சோழ மன்னர்களின் கதையை தழுவிய படம் என்பதாலும், ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரதத்தில் நடிகர் விக்ரம் தவிர்த்து வேறு ஒரு நடிகரை மணிரதத்தினம் ஏற்று கொள்ளாத மனநிலையில் இருந்துள்ளார்.
இதனால் விஜய் நடிப்பதாக இருந்த பொன்னியின் செல்வன் படத்தை கைவிட்டுள்ளார் மணிரத்தினம். இதனை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில் கரிகாலன் படத்தில் சுமார் 45 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், அந்த படத்தின் பொருளாதார பற்றாக்குறை காரணமாக கரிகாலன் படம் பாதியிலே கைவிடப்பட்டுள்ளது. இதனால் 2013ம் ஆண்டு வெளியாக இருந்த கரிகாலன் படம் வெளியாகவில்லை.
இதனைத் தொடர்ந்து மீண்டும் சில வருடங்கள் கழித்து பொன்னியின் செல்வன் படத்தை தூசி தட்டிய மணிரத்தினம், கதையை விரிவாக்கம் செய்து இரண்டு பாகங்களாக எடுக்க முடிவு செய்து , ஏற்கனவே ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் கமிட்டாகி இருந்த நடிகர் விக்ரம் மீண்டும் அதே கதாபாத்திரத்தை ஏற்க, மற்ற நடிகர்களை மாற்றிவிட்டு பொன்னியின் செல்வன் படத்தை எடுத்துள்ளார் மணிரதத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது.