நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் அவர்கள் டிசம்பர் 28ஆம் தேதி காலை 6:10 மணியளவில் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். அதன் பிறகு அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால், அவரைப் பார்க்க கட்டுக்கடங்காத கூட்டம் வீட்டின் முன் அலை மோதியதால், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
கேப்டன் விஜயகாந்த் உடன் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர்கள், ஸ்டன்ட் மாஸ்டர்கள் முதல், அவரை வைத்து படங்களை இயக்கிய இயக்குனர்கள், அவரோட சேர்ந்து நடித்த மிகப்பெரிய முன்னணி நடிகர்கள் வரை பலரும் அவரது மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இப்படியான நிலையில், இன்று தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களாக மின்னிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் நேரில் வருவார்கள் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் நடிகர் சூர்யா வெளிநாட்டில் இருந்து வீடியோ ஒன்றை எடுத்து தனது இரங்கல் செய்தியை சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார். அதேபோல், பல மணி நேரங்கள் ஆகியும் நடிகர் விஜய் வரவில்லை. இதனால் இணையவாசிகள் பலரும் சினிமாவில் தூக்கிவிட்ட விஜயகாந்த் இறப்பிற்கு கூட நேரில் வராமல் இருக்கும் இந்தப் பிரபலங்கள் நன்றி கெட்டவர்கள் தான் என்று விஜய்யையும் சூர்யாவையும் விமர்சித்து வந்தனர்.
காலையிலிருந்து விஜயகாந்தின் உடலுக்கு பல்வேறு அரசியல்வாதிகளும் தொண்டர்களும் திரையுலக பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், நடிகர் விஜய் இரவு 10:40 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து விஜய் ரசிகர்கள் பலரும் விஜயகாந்தின் மரண செய்தி கேட்டு, உடனடியாக வெளிநாட்டில் இருந்து விஜய் சென்னைக்கு புறப்பட்டு வந்திருக்கிறார் என்று தெரிவித்தனர்.
விஜயகாந்தை பார்க்க கையில் மாலையுடன் வந்த விஜய் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டார். விஜயகாந்தின் உடல் இருக்கும் இடத்திற்கு செல்வதற்குள் விஜய்யை ஏராளமானோர் சூழ்ந்து கொண்டனர். இருப்பினும் காவல்துறையினர் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு விஜய் பாதுகாப்பாக கொண்டு சேர்த்தனர். கனத்த இதயத்துடன் விஜயகாந்தின் உடலை பார்த்த விஜய், கண்கலங்கி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும் அங்கிருந்த விஜயகாந்தின் மனைவி மற்றும் மகன்களிடம் துக்கம் விசாரித்தார். கடைசியாக அங்கிருந்து புறப்படும் போது, கூட்டத்தில் இருந்து விஜய் இருந்த இடத்தை நோக்கி செருப்பு பறந்து வந்ததது. மேலும் விஜய் கன்னத்தில் மர்ம நபர் ஒருவர் குத்துவது போன்று வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அது மேலும் கூட்டத்தில் இருந்த ஒரு சிலர், விஜய்யை வெளியேறுமாறு கூறி முழக்கமிட்டனர். இது குறித்த வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய்க்கு இணையத்தில் மட்டுமில்லை, நேரில் சென்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற விஜய்க்கு நேரடியாகவே எதிர்ப்பு கிளம்பியதற்கு முக்கிய காரணம், விஜய் இன்று சினிமாவில் மிக பெரிய உச்சத்தில் இருக்கிறார் என்றால், அதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் தான், அப்படி விஜய்க்கு வாழ்க்கை கொடுத்த விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாமல் இருந்த போது நேரில் சென்று ஒருமுறை கூட விஜய் உடல் நலம் விசாரிக்க வில்லை என்கிற கோபத்தின் வெளிப்பாடு தான் என கூறப்படுகிறது.