நடிகர் விஜய் நடிப்பில் தற்பொழுது திரையரங்கில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் வாரிசு. பல வருடங்கள் கழித்து அஜித் திரைப்படத்துடன் நேரடியாக விஜய் நடித்த வாரிசு படம் மோதுகிறது. இதனால் அஜித் மற்றும் விஜய் இருவரின் ரசிகர்களுக்கு இடையிலான போட்டி உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் இதுவரை தொலைக்காட்சிகளில் மட்டுமே மெகா சீரியலை பார்த்து வந்த இல்லத்தரசிகளுக்கு பொங்கல் விருந்தாக அமைத்துள்ளது வாரிசு மெகா சீரியல், மன்னிக்கவும் வாரிசு திரைப்படம்.
சுமார் 50 வருடங்களுக்கு முன்பு நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான படிக்காத மேதை படத்தின் கதையில் சில கதாபாத்திரங்களை மட்டும் மாற்றி நடிகர் சிவாஜி கணேசன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜயை நடிக்க வைத்துள்ளார் வம்சி. வாரிசு படத்தில் நடிகர் சரத்குமார் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரர், அவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர், அதில் கடைசி மகன் நடிகர் விஜய்.
கடைசி மகன் விஜய் வெளிநாட்டில் படித்து முடித்துவிட்டு,நாடு திரும்புகிறார், தந்தையின் தொழிலை ஏற்கனவே இரண்டு மகன்கள் பார்த்து வருகிறார்கள், அதே போன்று இளைய மகன் விஜய் அவர்களுடன் இணைந்து தொழிலை பார்க்க வேண்டும் என தந்தை சரத்குமார் விரும்புகிறார், ஆனால் விஜய் தன்னுடைய சொந்த உழைப்பில் முன்னேற வேண்டும் என நினைக்கிறார், இதனால் தந்தை – மகன் இடையில் மோதல் உருவாகி மகன் விஜயை தந்தை சரத்குமார் வீட்டை விட்டு வெளிய போ என்று சொல்லும் காட்சியை பார்க்கும் பொழுது ஏற்கனவே சரத்குமார் நடித்த சூரிய வம்சம் காட்சிகள் கண் முன்னே வந்து செல்கிறது.
வீட்டை விட்டு வெளியேறிய விஜய் சொந்தமாக தொழில் தொடங்குகிறார், அவர் செய்யும் தொழில், குறுகிய காலத்தில் அசூர வளர்ச்சி இதையெல்லால் எப்படி என்று லாஜிக் இல்லாமல் நகர்கிறது, விஜய் குடும்பத்தை விட்டு வெளியில் வந்தாலும் தாய் ஜெயசுதாவிடம் மட்டும் தொலைபேசியில் பேசி வருகிறார், மகன் விஜய்யை மீண்டும் குடும்பத்தில் இணைக்க பல முயற்சிகளை மேற்கொள்கிறார் தாய் ஜெயசுதா, அந்த வகையில் சரத்குமார் 60 திருமண நிகழ்வுக்கு மகன் விஜய்யை தாய் அழைக்கிறார்.
தந்தை 60வது திருமண நிகழ்வுக்கு வந்த விஜய், குடும்பத்தில் இருக்கும் பல பிரச்சனைகளை கண்டறிந்து, அந்த பிரச்சனைகளை சரி செய்யவும், சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் தந்தையின் தொழிலை மீட்டு எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். படத்தில் இடம்பெற்ற டயலாக்குகள் ஏற்கனவே தமிழ் சினிமாவில் இடம்பெற்ற அரைச்ச மாவாகவே இருக்கிறது.
பல கதாபாத்திரங்கள் இந்த படத்தில் இடம்பெற்றிருந்தாலும் நடிகர் எஸ் ஜே சூர்யா வரும் அந்த மூன்று காட்சிகள் நடிகர் விஜய்யை ஓவர் டேக்ஸ் செய்யும் வகையில் அமைந்து, அதிகாலை படம் பார்க்க சென்ற விஜய் ரசிகர்கள், என்னடா இது மெகா சீரியல் தோற்று போகும் என தூக்கத்தில் இருந்தவர்களை எஸ்.ஜே சூர்யா வரும் காட்சிகள் தட்டி எழுப்புகிறது. இன்னும் சில நிமிடங்கள் எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் நடித்திருந்தால், வாரிசு படத்தின் ஹீரோ எஸ் ஜே சூர்யா என்று சொல்லும் அளவுக்கு படம் அமைந்து விடும் என்பதால் தான் இயக்குனர் எஸ்.ஜே சூர்யா நடிக்கும் காட்சிகளை இயக்குனர் குறைத்து இருக்கலாம்.
மொத்தத்தில் மெகா சீரியல் போன்று அமைந்துள்ள வாரிசு படத்ம் மிக நீளமாக உள்ளது, சீரியலுக்கு அடிமையாகி உள்ள இல்லத்தரசிகள் பார்க்க வேண்டிய சீரியலை ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து அதிகாலையில் பார்க்கிறோமே என்று கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுது கொண்டே தான் விஜய் ரசிகர்கள் வாரிசு படம் பார்க்கும்படி உள்ளது. இறுதியில் வாரிசு மெகா சீரியலில், மன்னிக்கவும், வாரிசு படம், இதுவரை தொலைக்கட்சிகளில் மட்டும் மெகா சீரியல் பார்த்து வந்த இல்லத்தரசிகள் திரையரங்குகளில் மெகா சீரியல் பார்த்து கண்ணீருடன் இல்லத்தரசிகள் கொண்டாடும் படமாக அமைத்துள்ளது.