சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான மகாராஜா திரைப்படம் சக்கை போடு போட்டு வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே 37 கோடி வசூலை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. மேலும் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் மக்களும் படத்தை பெருமளவு கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தனது சம்பளத்தை அதிரடியாக குறைத்துள்ளார் விஜய் சேதுபதி. வழக்கமாக ஒரு திரைப்படம் வசூலை குவித்தால் அதில் நடித்த நடிகர் முதல் இயக்குனர், இசையமைப்பாளர் வரை அனைவரும் தங்கள் சம்பளத்தை அதிகரிக்க தான் செய்வார்கள். ஆனால் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இதுவரை 15 கோடி 17 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சூழலில் 10 கோடியாக குறைத்து விட்டார்.
இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம், அவர் இதுவரை கொடுத்த தொடர் தோல்வி படங்கள்தான் என்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் அவர் ஹீரோவாக நடித்த ஒரு படம் கூட ஓடவில்லை என்பது விஜய் சேதுபதியின் சினிமா வாழ்க்கையில் கரும்புள்ளியாக இருந்து வந்தது. 2016 முதல் 2020 காலகட்டம் வரை நானும் ரவுடிதான், தர்மதுரை, சேதுபதி, விக்ரம் வேதா, 96 என பல ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தார் விஜய் சேதுபதி.
இந்நிலையில்தான் சில கோடியாக இருந்த தன்னுடைய சம்பளத்தை 15 கோடி வரை கிடுகிடுவென உயர்த்தினார். ஆனால் அதன் பிறகு அவர் நடித்த லாபம், துக்ளக் தர்பார், மாமனிதன் என அத்தனை படங்களும் அட்டர் பிளாப் தான்! நடுநடுவே மாஸ்டர் விடுதலை போன்ற படங்கள் பெரிய வெற்றியாக கொண்டாடப்பட்டாலும் அதில் விஜய் சேதுபதி மெயின் ஹீரோவாக நடிக்கவில்லை என்பதால் விஜய் சேதுபதி சைடு கேரக்டராகவோ வில்லனாகவோ வந்தால் தான் படம் ஓடும் எனும் அளவிற்கு அவரது ஹீரோ இமேஜ் டேமேஜ் ஆனது.
இது போதாது என சமீபத்திய படங்கள் சரியாக ஓடாததால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு, விஜய் சேதுபதியை வைத்து படம் எடுக்க யாருமே முன்வரவில்லையாம். மேலும் படம் எடுத்து முடித்த பின்பும் அதற்கான சாட்டிலைட் ரைட்ஸ், டிஜிட்டல் ரைட்ஸ் சரியாக விற்பனையாகாதால் ஏற்கனவே படம் எடுத்த தயாரிப்பாளர்களும் விஜய் சேதுபதியின் மீது அதிருப்தியில் இருந்துள்ளனர்.
இதனால் தான் விஜய் சேதுபதி தன் பழைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு சம்பளத்தை குறைத்துள்ளாராம். மேலும், தன்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கும் இனி எந்த காலத்திலும் நஷ்டம் வரக்கூடாது என்பதிலும் குறியாக இருக்கிறார். விஜய் சேதுபதியின் இந்த முடிவை சினிமா விமர்சகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.கூடவே பிற நடிகர்களும் இதே போல் அவர்களின் மார்க்கெட் ரேட்டிற்கு ஏற்ப தங்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.மேலும் விஜய் சேதுபதியின் இந்த முடிவானது துவண்டு நிற்கும் தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்த ஒரு விதையை போட்டுள்ளதாகவும் நேர்மறையாக பல விமர்சனங்களம் வந்து கொண்டிருக்கிறது.